Published : 04 Feb 2014 09:40 AM
Last Updated : 04 Feb 2014 09:40 AM
தெற்கு டெல்லியில் கடந்த 29-ம் தேதி அருணாசலப் பிரதேச எம்எல்ஏ மகன் நிடோ டானியா, கடைக்காரர்கள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் வடகிழக்கு மாநில மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அம்மாணவர்களை நேரில் சந்தித்த ராகுல், அவர்கள் மத்தியில் பேசுகையில், “இந்த சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்படும். டெல்லியில் வடகிழக்கு மாநிலத்தவர் பாதுகாப்பு குறித்து ஆராய விசாரணைக் குழு அமைக்கப்படும்” என்றார்.
முன்னதாக, அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சருமான நினோங் எரிங் தலைமையில் அம்மாநில மாணவர்கள் பலர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்தனர்.
அப்போது அவர்கள் முன்னிலையில் உள்துறை அமைச்சர் ஷிண்டேவை தொலை பேசியில் தொடர்புகொண்ட ராகுல், இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடுமாறும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தற்போது வெளியூரில் இருக்கும் ஷிண்டே, செவ்வாய்க் கிழமை டெல்லி திரும்பியதும் இதில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக பதில் அளித்தாக நினோங் எரிங் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
இதனிடையே உள்துறை அமைச்சக உயர்நிலைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கப்படுவது போன்ற சம்பவங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீஸுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு நோட்டீஸ்
இதனிடையே இச்சம்பவத்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமை யிலான அமர்வு, திங்கள்கிழமை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சம்பவம் தொடர்பாக, வரும் புதன்கிழமைக்குள் விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி அரசு, டெல்லி போலீஸ் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT