Published : 13 Oct 2014 03:11 PM
Last Updated : 13 Oct 2014 03:11 PM
இந்திய மீனவர் பிரச்சினையின் தனது அரசு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா ஆகிய இரு மாநிலங்களின் சட்டப் பேரவைக்கும் வரும் 15-ஆம் தேதி (புதன்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது.
இரு மாநிலங்களிலும் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓயும் நிலையில், பாஜக-வின் சார்பாக மீனவ சமுதாய மக்களுக்காக புதிதாக ஏற்படுத்தப்பட்ட புல்கார் மாவட்டத்தில் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, "கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்ட 200 மீனவர்களையும், அவர்களது 50 படகுகளையும் அந்நாட்டு அரசு விடுவித்தது. இந்த நடவடிக்கை, நான் பிரதமராக பதவியேற்ற உடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு விடுத்த கோரிக்கையை அடுத்து மேற்கொள்ளப்பட்டது.
இதே போல, இராக் உள்நாட்டு பிரச்சினையில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட நமது நாட்டுப் பெண்கள் தக்க கண்ணியத்துடன் நமது சோர்வடையாத முயற்சியினால் விடுவிக்கப்பட்டனர். எனது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ரிப்போர்ட் கார்டு கேட்பவர்களுக்கு, ஏழை மக்களின் மகள்கள் மீட்கப்பட்டதும், நமது மீனவர்கள் விடுதலையானது குறித்தெல்லாம் நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனால், இவை அனைத்தையும் மக்கள் மனதில் வைத்துள்ளனர்.
குஜராத்தில் கூட நான் இப்படி ஒரு கூட்டத்தை பார்த்ததில்லை. ஆனால், மகாராஷ்டிராவில் காலை 9 மணிக்கே மக்கள் திரண்டு இருப்பது ஆச்சிரியமாக உள்ளது. இதன் மூலம் மக்களுக்கு பாஜக மீது உள்ள நம்பிக்கை தெரிகிறது. இங்கு பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது. நாளை மறுநாள் நடக்க இருக்கும் தேர்தலில் மாகாராஷ்டிராவை சுரண்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதியாகி உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT