Published : 17 Aug 2016 08:20 AM
Last Updated : 17 Aug 2016 08:20 AM
காவிரி நீர் வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்த விவரங்களை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்யும்படி தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங் களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் பங்கீடு குறித்து விசாரித்த நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பை வழங்கியது. இதில், காவிரியில் ஆண்டுதோறும் கிடைக்கும் நீரின் அளவு 740 டிஎம்சி என்று முடிவு செய்யப்பட்டது. இதில், தமிழகம் - 419, கர்நாடகம் - 270, கேரளா-30, புதுச்சேரி - 7 டிஎம்சி என்ற அளவில் நீரை பங்கிட்டு நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. இந்த நீரை மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள காலங்களில் இதே சதவீத அடிப்படையில், இருக்கும் நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரூ.2,486 கோடி இழப்பீடு
இந்த உத்தரவை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் வரையறைக் குழு ஆகியவற்றை அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு 2013-ம் ஆண்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால், இன்னும் காவிரி மேலாண்மைக் குழு அமைக்கப்படவில்லை. இதற்கிடையே, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, நடுவர் மன்ற உத்தரவின்படி தண்ணீர் திறக்காததைக் கண்டித்து தமிழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காததால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்ட கர்நாடக அரசு தமிழக விவசாயிகளுக்கு ரூ.2,486 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டு தமிழக அரசு சார்பில் கூடுதலாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
இம்மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோபால கவுடா, ஏ.கே.கோயல் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அம்சங்கள் எவை எவை என்ற விவரங்களை ஒரு வாரத்துக்குள் தனித்தனியாக தாக்கல் செய்யும்படி, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை யடுத்து வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கர்நாடகம் கைவிரிப்பு
காவிரி நீர் தேக்கி வைக்கப்படும் அணைகளில் பிரதானமாக உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் தற்போது 15 டிஎம்சி அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. சராசரியாக தற்போது 40 டிஎம்சி அடி தண்ணீர் இருக்க வேண்டும் என்று கர்நாடகம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள 15 டிஎம்சி நீரில் பெங்களூரு நகரின் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான குடிநீர் தேவைக்கு 10 டிஎம்சி தேவை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது. அதேசமயம் கர்நாடக விவசாயிகளின் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அம்மாநில விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று மாநில அரசு பிடிவாதமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT