Published : 30 Dec 2013 07:22 PM
Last Updated : 30 Dec 2013 07:22 PM
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, டெல்லியில் ஜனவரி 1 முதல் தினமும் வீட்டு உபயோகத்திற்கு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 667 லிட்டர் தண்ணீர் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில், அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து டெல்லி குடிநீர் வாரியத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நிர்வாக அதிகாரி விஜய் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வீட்டு உபயோகத்திற்காக மீட்டர் இணைப்பு வைத்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ஜனவரி 1 முதல் மாதம்தோறும் 20,000 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். இந்தத் தண்ணீருக்கு எந்த வகையிலும் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது" என்றார்.
அதேவேளையில், 20,000 லிட்டர் என்ற அளவைத் தாண்டினால், அதற்குரிய கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
டெல்லி அரசின் தற்போதைய முடிவு குறித்து 3 மாதத்துக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நாளைக்கு 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆம் ஆத்மி அரசு முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, நிதி நெருக்கடி காரணமாக, ஜனவரியில் இருந்து தண்ணீர் கட்டணத்தில் 10 சதவீதத்தை உயர்த்துவது என டெல்லி குடிநீர் வாரியம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT