Published : 07 Feb 2017 09:37 AM
Last Updated : 07 Feb 2017 09:37 AM
முன்னாள் மத்திய அமைச்சர் இ.அகமது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி, வாயில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு கேரள எம்பிக்கள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.
நேற்று காலையில் மக்களவை கூடியதும், அகமது மரணம் தொடர்பாக விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் மற்றும் புரட்சிகர சோஷலிச கட்சி உறுப்பினர் என்.கே.பிரேமசந்திரன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
மேலும் அகமது மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி, கேரள எம்.பி.க்கள் வாயில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.
கடந்த ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது.
இதில் பங்கேற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மக்களவை உறுப்பின ருமான அகமதுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 1-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
முன்னதாக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்த அகமதுவை பார்க்கவோ சிகிச்சை பற்றிய விவரம் கேட்கவோ அனுமதி வழங்கவில்லை என அவரது மகன் மற்றும் உறவினர் கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
இதையடுத்து, பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், “அகமதுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவரம் பற்றி அவரது குடும்பத்தினருக்கு உரிய தகவல் தெரிவிக்காதது கவலை அளிக்கிறது.
மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அணுகி இருக்க வேண்டும். எனவே, அகமதுவின் மரணம் தொடர் பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT