Published : 25 Dec 2013 07:04 PM
Last Updated : 25 Dec 2013 07:04 PM

அரசியல் பழிவாங்கலுக்கு இடமில்லை: ஆம் ஆத்மிக்கு காங். எச்சரிக்கை

டெல்லியில் ஆட்சிப் பொறுப்பேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டால், அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அக்கட்சிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, டெல்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, அரசியல் ரீதியாகப் பழிவாங்கல் நடவடிக்கையில் எந்தக் கட்சியாவது ஈடுபட்டால், தங்களது குரலை எழுப்புவது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் நிலைப்பாடு குறித்து அவர் கூறும்போது, "முதல்வர் மற்றும் அனைவருமே ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்பது கடமை. அவர்கள் பதவியேற்கும்போது, ஊழலுக்கு எதிராக போராடுவது குறித்தும் உறுதிமொழி ஏற்கின்றனர். அப்படி இருக்க, ஊழல் பற்றி தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை" என்றார் அவர்.

அதேவேளையில், டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமைக்க ஆதரவு அளிப்பது என்ற காங்கிரஸின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலைத் தொடர்ந்து, வரும் சனிக்கிழமை டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார். அவருடன் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் பதவியேற்கின்றனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 28 ஆம் தேதி பகல் 12 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x