Published : 05 Jan 2016 09:08 PM
Last Updated : 05 Jan 2016 09:08 PM

மணிப்பூர் பூகம்பம்: அறிவியல் ஆய்வுகள் கூறுவது என்ன?

மணிப்பூரில் ரிக்டர் அளவுகோலில் 6.7 என்று பதிவான பூகம்பம் ஞாயிறன்று ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் சில இடிந்து விழுந்ததில் சுமார் 10 பேர் பலியாயினர்.

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு போல் 11 அணுகுண்டுகளை வீசியிருந்தால் வெளியாகும் ஆற்றல் இந்த நிலநடுக்கத்திலிருந்து வெளிப்பட்டுள்ளதாக காரக்பூர் ஐஐடி ஆய்வாளர் சங்கர் குமார் நாத் தெரிவித்துள்ளார்.

இம்பால் நகருக்கு 29 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் இருந்தது. இப்பகுதியில் பெரிய நிலநடுக்கங்கள் வழக்கமான நிகழ்வே. இந்திய-யுரேசிய பெரும்பாறைகள் மோதிக்கொள்வதால் இத்தகைய பூகம்பங்கள் நிகழ்வது நாம் அறிந்த விஞ்ஞான தகவலே. யுரேசிய கண்டத்தட்டுக்குள் இந்திய கண்டத்தட்டு ஆண்டுக்கு 5செமீ வரை உள்ளே செல்கிறது. இந்தப் பகுதியின் நிலவியல் மிகவும் சிக்கலானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யுஎஸ்ஜிஎஸ் தேசிய பூகம்பத் தகவல் மையத்தின் விஞ்ஞானி ஹார்லி பென்ஸ் கூறும்போது, “சான் ஆண்ட்ரியாஸ் போல இந்தப் பாறைப்பெயர்ச்சி பிளவு நன்கு விளக்கப்படக் கூடிய ஒன்றல்ல. இது ஆழமற்றது மேலும் மிகக்குறைவான அகலம் கொண்டது. ஆனால் இந்த மணிப்பூர் நிலநடுக்கம் பூமியின் மையப்பகுதிக்கும் அதன் புறப்பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியாகும், இங்கு பரந்துபட்ட சிதைவு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி நிலநடுக்க வாய்ப்புகள் அதிகமுள்ள பகுதி எனவே இந்த அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதென்பது வழக்கத்துக்கு மாறானது அல்ல” என்றார்.

இந்திய-யுரேசிய கண்டத்தட்டுகள் சந்திக்கும் புள்ளியின் அடியில் நிகழும் ஆற்றல் வாய்ந்த புவிச்செயல்பாடுகளுக்கு சாட்சியமாக நிற்பதுதான் இமாலயத்தின் உயரிய சிகரங்களும் இந்துகுஷ் மலையும்.

த்ரஸ்ட் ஃபால்ட் என்பார்கள், இதில் பிளவுண்ட தாங்கு பெரும் பாறைகள் ஒன்றை மற்றொன்று தள்ளி எழும்பச் செய்வதாகும், மற்றொன்று ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் என்று அழைக்கப்படுகிறது, இதில் ஒன்று மற்றொன்றிலிருந்து கீழ் நோக்கி நழுவிச் செல்வதாகும். மணிப்பூரில் ஏற்பட்டது இந்த ஸ்ட்ரைக்-ஸ்லிப் வகையறாகவும். இதில் த்ரஸ்ட் பால்ட் போல் அல்லாமல் கிடைக்கோட்டு நகர்வு பெரும்பாலும் இருக்கும். கிடைக்கோட்டு நகர்வில் பாதிப்பு பெரிய அளவுக்கு இருக்காது, நேபாளத்திலும் பிற இமாலய பகுதிகளிலும் ஏற்படும் பூகம்பங்கள் செங்குத்து நகர்வாகும். இதனால்தான் பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.

இதனால்தான் நேபாள பூகம்பத்தையும் மணிப்பூர் பூகம்பத்தையும் விஞ்ஞானிகள் தொடர்புபடுத்த மறுக்கின்றனர். இத்தகைய நிலநடுக்கங்கள் எதிர்காலத்தில் பெரிய பூகம்பம் ஒன்று நிகழ்வதற்கான முன்னறிகுறியாக பார்க்கப் படவேண்டிய தேவையில்லை என்றே இவர்கள் கருதுகின்றனர்.

மணிபூர் பூகம்பத்தைப் பொறுத்தவரை சுமத்ரா மற்றும் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே, இந்திய கண்டத்தட்டு யுரேசிய கண்டத்தட்டுக்கு அடியில் சென்ற நிகழ்வாகும். இதனால் ஏற்படுவதே ‘ஸ்ட்ரைக்-ஸ்லிப்’ நிலநடுக்கங்களாகும். ஆனால் இதே பகுதியில் ஒன்றை மற்றொன்று மோதித்தள்ளி எழும்பச்செய்யும் த்ரஸ்ட்-பால்ட்களும் உள்ளன.

மணிப்பூருக்கு வடக்குப் பகுதி, இமாலயப்பகுதியின் ஊடாக நிறைய பூகம்ங்கள், ஆழமற்ற த்ரஸ்ட் ஃபால்ட்களின் வழியாக ஏற்படுகிறது. இதன் ஒரு சமீபத்திய உதாரணம் நேபாளத்தை புரட்டிப் போட்ட ஏப்ரல் 2015 பூகம்பம் ஆகும். இதில் 9,000 பேர் மரணமடைந்தனர், மனித நாகரிக சின்னமாக விளங்கிய பல கட்டிடங்கள் தரைமட்டமானது. எவரெஸ்ட் சிகரத்தையே ஒரு அங்குலம் நகர்த்திய பூகம்பமாகும் இது. எனவே த்ரஸ்ட் ஃபால்ட், ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் ஆகிய் இரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் மணிப்பூர் பூகம்பம் நிகழ்ந்துள்ளது. இதன் நிலவியல் மிகவும் சிக்கலானது.

பூமிக்கு அடியில் 34 மைல்கள் ஆழத்தில் மணிபூர் பூகம்பம் ஏற்பட்டதால் சேத விளைவு குறைவாக இருந்துள்ளது. இன்னும் கொஞ்சம் மேலாக நிகழ்ந்திருந்தால் பெரிய பூகம்பமாக அது ஆகியிருக்கக் கூடும்.

இம்பால் அகலம் அதிகமுள்ள பள்ளத்தாக்கின் மேல் அமைந்திருப்பதால் பூகம்ப அலைகள் அதிக நிமிடங்கள் பூமியை அசைத்திருக்கிறது. ஆனால் குறைவான ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தால் பூமி அதிக நேரம் ஆடியிருக்காவிட்டாலும் கூட சேதம் அதிகமிருந்திருக்கும். அதிக ஆழத்தில் ஏற்பட்டதால்தான் பின்னதிர்வுகள் இல்லை என்கிறார் யு.எஸ்.ஜி.எஸ். அறிவியல் நிபுணர்.

இந்திய வடகிழக்கு மாநிலங்கள் உலகிலேயே பூகம்ப அதிகம் ஏற்படும் 6-வது பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x