Published : 30 Dec 2014 10:22 AM
Last Updated : 30 Dec 2014 10:22 AM
நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதனை எளிமையாக்க மத்திய அரசு நேற்று அவசர சட்டத்தை கொண்டு வந்தது.
இதன் மூலம் எரிசக்தி, வீட்டுவசதி திட்டம், பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தடைகள் பெருமளவில் குறையும் என மத்திய அமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதம் நிலம் கையகப்படுத்துவதற்கான சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படும் என்றும், நிலங்களை கையகப்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது நகராட்சி நிர்வாகங்களிடம் ஆலோசித்து முன் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
அதிலும் தனியார் பங்களிப்பு திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களில் 70 சதவீதம் பேரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அந்த புதிய சட்டம் கூறியது.
அத்தோடு தனியார் திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களில் 80 சதவீதம் பேரிடம் கண்டிப்பாக ஒப்புதல் பெற வேண்டும் என்றும், எந்த ஒரு திட்டத்துக்காகவும் வலுக்கட்டாயமாக நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும் அந்த சட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.
மேலும் கிராமப்புறங்களில் கையகப்படுத்தும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில், நான்கு மடங்கு விலையும், நகர்ப்புறத்தில் கையகப்படுத்தும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில், இரண்டு மடங்கு விலையும் கொடுக்க வேண்டும் என்கிற நிலையையும் அந்த சட்டம் வகுத்திருந்தது.
முழு விலையையும் கொடுக்கும் வரை நிலத்தின் உரிமையாளருக்கு, அந்த நிலத்தில் உரிமை உண்டு என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியது: இப்போதுள்ள நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் உள்ள சில கடுமையான கட்டுப் பாடுகளால் அரசின் முக்கியத் திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.
முக்கியமாக பாதுகாப்புத் துறைக்கான நிலத் தேவை, ஊரக உள்கட்டமைப்பு, ஏழைகளுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தி தருதல், தொழிற்பேட்டை அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளன. எனவே அதனை எளிமையாக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
புதிய சட்டத்திற்கு பிறகு தனியார் நிலங்களை கையகப்படுத்துவது கடினமாகிவிட்டதாகவும், அதனால் அந்த சட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தினால் தான் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்பதால் தான் இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அருண் ஜேட்லி கூறினார்.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களின் மூலம், விவசாய வளர்ச்சி மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவை சரியான விகிதத்தில் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்த மாற்றங்கள் தனியார் நில உரிமையாளர்களை - குறிப்பாக கிராமப்புற விவசாயிகளை பாதிக்கும் என்று எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
நிலம் கையகப்படுத்தல் சட்டம் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில் முக்கியத்துவம் கொடுத்து கொண்டுவரப்பட்டதாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT