Published : 06 Mar 2016 01:05 PM
Last Updated : 06 Mar 2016 01:05 PM
சர்ச்சைக்குரிய பி.எஃப். வரிவிதிப்பு குறித்த அனைத்து தெரிவுகளும் பரிந்துரைகளும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.எஃப். மீதான வரிவிதிப்பை முற்றிலும் கைவிடவும் வாய்ப்புள்ளதாக மூத்த அதிகாரிகள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்துள்ளனர்.
நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவிக்கும் போது புதிய ஓய்வூதியத் திட்டம் அமலாகி 10 ஆண்டுகள் ஆகியும் அது பெரிய பலனை அளிக்கவில்லை என்பதால் இந்த வருங்கால வைப்பு நிதி எடுப்பில் 60% தொகைக்கு வரிவிதிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இது குறித்த அனைத்து விவகாரங்களும், ஆட்சேபங்களும் பிரதமர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதாவது ஒருவர் தனது பி.எஃப். தொகையை முழுதும் எடுத்தால் அதில் 60% தொகைக்கு வரி விதிக்கப்படும், மாறாக அவர் பென்ஷன் திட்டம் ஒன்றில் அந்த 60% தொகையை முதலீடு செய்ய முடிவெடுத்தால் வரி விதிப்பு கிடையாது என்று நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.
இது குறித்து நிதியமைச்சகத்தின் இணைச் செயலர் வி.அனந்தராஜன் கூறும்போது, “வரிவிதிப்பில் பல்வேறு பென்ஷன் நிதி தொடர்பாக சமத்துவத்தை புகுத்த நினைத்தோம். ஆனால் தற்போது இவை அனைத்தும் உயர்மட்ட கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. நான் இது குறித்து மேலும் எதையாவது கூறி குழப்ப விரும்பவில்லை. தேசிய பென்ஷன் தொகை ஏன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லையெனில் பண எடுப்பின் போது அதற்கு வரிவிதிக்கப்படுகிறது. எனவே பி.எஃப். எடுப்பில் 60% தொகைக்கு வரிவிதிக்க முடிவெடுக்கப்பட்டது” என்றார்.
வரிவிதிப்பு முன்மொழிவைக் கைவிட உள்ளிருந்தே வலியுறுத்தல்:
பி.எஃப். தொகை மீதான வரிவிதிப்பு குறித்து வெளியிலிருந்து போதுமான எதிர்ப்பு வந்து கொண்டிருந்தாலும் பாஜக உள்கட்சி வட்டாரங்களிலிருந்தும் எதிர்ப்புகள் வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாஜக-வுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல், வரிவிதிப்பை கைவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியதாகவும் கட்சியின் மற்ற தலைவர்களும் தலைவர் அமித் ஷாவிடம் வரி விதிப்பு கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்திருப்பதாகவும் கூறினர்.
பட்ஜெட்டுக்குப் பிறகான பாஜக-வின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில், எம்.பி.க்கள் இந்த வரிவிதிப்பு பற்றி கவலைகளை வெளியிட்டுள்ளனர். அதாவது நகர்ப்புற நடுத்தர மக்கள் தொகுதியே பாஜக-வின் பெரிய வாக்கு வங்கி என்றும் தெரிவித்துள்ளனர், சிவசேனா கட்சி வெளிப்படையாகவே இந்த வரிவிதிப்பு மோச்மான யோசனை என்று எழுதி விட்டது.
மேலும் பிரதமருக்கு நெருக்கமான ஆலோசகர்களில் ஒருவரான டெல்லியில் உள்ள குஜராத் அதிகாரி ஒருவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த வரிவிதிப்பின் எதிர்மறை விளைவுகள் குறித்து எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
எனவே வரும் செவ்வாய் அல்லது புதனன்று பட்ஜெட் குறித்த விவாதத்தில் பி.எஃப். வரி விதிப்பு முன்மொழிவை கைவிடுவதாக அருண் ஜேட்லி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT