Published : 13 Mar 2017 02:36 PM
Last Updated : 13 Mar 2017 02:36 PM

பாதுகாப்பு அமைச்சராகிறார் ஜேட்லி?- அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது பாஜக

மனோகர் பாரிக்கர் ராஜினாமாவால், இப்போதைக்கு பாதுகாப்பு அமைச்சகம் கூடுதல் பொறுப்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து நாளை கோவா முதல்வராக பதவியேற்கிறார்.

இந்நிலையில், இப்போதைக்கு பாதுகாப்பு அமைச்சகம் கூடுதல் பொறுப்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரத்திலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படும். பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து ஒரு முதல்வர் டெல்லிக்கு வரவழைக்கப்படுவார். பாஜக மத்திய குழுவில் உள்ள மூத்த பொதுச் செயலாளர் ஒருவர் அந்த மாநிலத்தின் முதல்வராக அனுப்பப்படுவார்.

அதுவரையில், பாதுகாப்பு அமைச்சகம் தற்போதுள்ள மூத்த அமைச்சர்களில் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்படும். பெரும்பாலும், அருண் ஜேட்லிக்கு அப்பொறுப்பு ஒதுக்கப்படலாம்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் நிறைவுபெற்ற பின்னர், மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது" என்றார்.

"உத்தரப் பிரதேச தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் மோடியின் பிடி வலுவடைந்துள்ளதால் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து சக்தி வாய்ந்த முதல்வரை டெல்லி தலைமை அழைத்தாலும்கூட நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை" என பாஜக தலைமை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x