Published : 30 Jan 2014 09:35 AM
Last Updated : 30 Jan 2014 09:35 AM
பிஹாரில் அமையவுள்ள தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு நடத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை லோக் ஜனசக்தித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் புதன்கிழமை சந்தித்து பேசினார்.
காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கும், பாஸ்வானின லோக் ஜனசக்திக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையில் சோனியாவுடனான இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து சோனியாவிடம் பேசிய பாஸ்வான், தொகுதி பங்கீடு தொடர்பாக லாலு பிரசாத்துடன் பேச்சு நடத்த தனக்கு விருப்பமில்லை என்று கூறியதாகத் தெரிகிறது. லோக் ஜனசக்திக்கு குறைந்தது 10 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தையை சோனியா காந்தி தலைமையேற்று நடத்த வேண்டும் என்று பாஸ்வான் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது ராம் விலாஸ் பாஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தியின் ஆட்சிமன்றக் குழு தலைவருமான சிராக் பாஸ்வானும் உடனிருந்தார்.
அப்போது, கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடமும், காங்கிரஸ் கட்சியின் பிஹார் மாநில பொறுப்பாளர் சி.பி.ஜோஷியிடமும் ஆலோசனை நடத்துமாறு சோனியா காந்தி இருவரிடமும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் சிராக் பாஸ்வான் கூறுகையில், “காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் இணைந்துள்ளோம். எங்களைத் தவிர வேறு எந்த கட்சியை எல்லாம் சேர்ப்பது என்பது குறித்து காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும். தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தெளிவான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவே சோனியாவை சந்தித்தோம்” என்றார்.
தாங்கள் போட்டியிட உத்தேசித்துள்ள 10 தொகுதிகள் அடங்கிய பட்டியலை ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் பிஹார் மாநில பொறுப்பாளர் சி.பி.ஜோஷியிடம் லோக் ஜனசக்தி கட்சி அளித்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT