Published : 16 Jan 2014 10:50 AM
Last Updated : 16 Jan 2014 10:50 AM
தமிழகம் – கர்நாடகம் இடையிலான காவிரி நதி நீர் வழக்குகள் அனைத்தும் மார்ச் இரண்டாவது வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
காவிரி நதி நீர் விவகாரத்தில், தமிழக அரசு சார்பில் பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், 65 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடவேண்டும், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என பிரச்சினைகளுக்கு ஏற்ப அவ்வப்போது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தனி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் புதன்கிழமை விசாரணைக்கு வரவிருந்தன.
இந்நிலையில் இவ்வழக்குகள் நேற்று விசாரணைக்கு வரும் முன், நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, கூரியன் ஜோசப், மதன் பி.லோகூர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் தமிழக அரசு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், கர்நாடக அரசு வழக்கறிஞர் பாலி எம்.நரிமன் ஆகியோர் ஆஜராகினர். “காவிரி வழக்குகளின் வி்சாரணை தாமதமாகி வருவதால் அவற்றை உடனடியாக விசாரிக்க வேண்டும்” என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதற்கு நீதிபதிகள், “காவிரி சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளும் மார்ச் இரண்டாவது வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று தெரிவித்தனர்.
காவிரி மேலாண்மை ஆணையம் கேட்டு தமிழகம் தாக்கல் செய்த மனு, இதற்கு முன் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT