Published : 05 Sep 2014 02:17 PM
Last Updated : 05 Sep 2014 02:17 PM
வழக்கு விசாரணை இல்லாமலே அதிக நாட்கள் சிறையில் வாடும் 2.5 லட்சம் விசாரணைக் கைதிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. குற்றவியல் நீதிபதிகள் வாரம் ஒருமுறை சிறைக்குச் சென்று இதுகுறித்து முடிவெடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நக்ஸலைட்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பலர் விசாரணையின்றி, பல ஆண்டுகளாக சிறையில் வாடுவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
2.5 லட்சம் கைதிகள்
நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 4 லட்சம் கைதிகளில், 2.5 லட்சம் பேர் விசாரணைக் கைதிகள் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அதிகபட்சம் கிடைக்க வாய்ப்புள்ள தண்டனையில், பாதி காலத்தை விசாரணையின்றி சிறையில் கழித்துவிட்டால், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதை விசாரணை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்வதில்லை.
வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் குற்றவியல் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் தங்கள் அதிகார எல்லைக்குள் உள்ள சிறைகளுக்கு வாரம் ஒரு முறை நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கு மேற்பட்ட தண்டனைக் காலத்தை விசாரணையின்றி கழித்தவர்களை விடுவிக்க வேண்டும். இரண்டு மாதங்கள் இதுபோன்று விசாரணை நடத்தி, உச்ச நீதிமன்றத்துக்கு டிசம்பர் 1-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.
3 கோடி வழக்குகள்
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் மூன்று கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. இதை விசாரிக்க 16,000 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கையை எந்த சதவீதத்துடனும் ஒப்பிட முடியாது. மத்திய அரசு நீதித்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரித்து கூடுதல் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தர வில் கூறியுள்ளனர். விசாரணைக் கைதி கள் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.
டெல்லி திகார் சிறையில் உள்ள ஒரு அறையில் உட்கார்ந்திருக்கும் கைதிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT