Last Updated : 23 Mar, 2014 10:36 AM

 

Published : 23 Mar 2014 10:36 AM
Last Updated : 23 Mar 2014 10:36 AM

மத்திய அமைச்சர் கபில் சிபல் சொத்து 3 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்ந்தது: ஆம் ஆத்மி ராக்கி பிர்லாவின் சொத்தும் கூடியது

மத்திய சட்டத்துறை அமைச்சரான கபில் சிபலின் சொத்து மதிப்பு கடந்த தேர்தலுக்கு பிறகு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. ஆம் ஆத்மியின் முன்னாள் அமைச்சர் ராக்கி பிர்லாவின் சொத்து மதிப்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து, ரூ.3.9 லட்சமாகக் கூடியுள்ளது.

டெல்லியின் சாந்தினி சவுக் எம்.பி.யான கபில்சிபல், தனது வேட்புமனு தாக்கலின் போது சொத்து மதிப்பு சுமார் 114 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார். அசையா சொத்துக்களின் மதிப்பு சுமார் 72.11 கோடி ரூபாய். இவரது மனைவி பிரமிளா சிபலின் பெயரில் சுமார் 30 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2011-ல் மத்திய அமைச்சர்கள் தங்கள் சொத்து மதிப்புகளை காட்ட வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்ட தன் பேரில் கபில்சிபல் ரூபாய் 38 கோடி எனக் கூறியிருந்தார். இதன்படி, இந்தத் தொகை மூன்று வருடங்களில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு முன்பாக 2009 தேர்தலில் காட்டிய சொத்துக்களின் மதிப்பு 2011-ல் 25 சதவிகிதம் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மியின் சொத்து விவரம்

கபில் சிபலை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான அசுதோஷ் தனது மனு தாக்கலில் ரூ.8 கோடி சொத்து காட்டியுள்ளார். அவரது மனைவி மணீஷா தனேஜாவின் சொத்து ரூ.40.5 லட்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக இந்தி செய்தி சேனல்களில் பத்திரிகையாளராக இருந்த அசுதோஷிடம் வோல்ஸ்வேகன் கார், இருசக்கர வாகனம், 230 கிராம் தங்கநகைகள், இருவரது பெயரிலும் நொய்டாவில் இரண்டு அடுக்கு மாடி வீடுகளும் உள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் கிழக்கு டெல்லி வேட்பாளரும் மகாமா காந்தியின் கொள்ளுபேரனுமான ராஜ்மோகன் காந்தியின் சொத்து மதிப்பு ரூ.2.1 கோடியாக உள்ளது. இவர் தன் வேட்புமனு தாக்கலில் கடந்த வருடம் ரூ.7 லட்சம் வருமான வரி செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் 15 லட்சம் மதிப்புள்ள வேளாண் சாராத நிலம், 50 லட்சம் மதிப்பில் ஹரியானாவின் குர்காவ்னிலும், 2.2 கோடியிலான அமெரிக்காவிலும் தலா ஒரு அடுக்கு மாடி வீடு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்களது கட்சியில் மற்றொரு பத்திரி கையாளரான ராக்கி பிர்லா டெல்லியின் மங்கோல்புரி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது மிக, மிக ஏழை வேட்பாளராக செய்திகளில் காண்பிக் கப்பட்டார். கடந்த டிசம்பரில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த போது ராக்கியின் சொத்து மதிப்பு வெறும் ரூ.51,150தான்.

வடமேற்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக்கப் பட்டுள்ள ராக்கி, தன் அசையும் சொத்து மதிப்பு ரூபாய் 1.6 லட்சம் மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூபாய் 2.3 லட்சம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x