Published : 11 Nov 2013 07:06 AM Last Updated : 11 Nov 2013 07:06 AM
நாட்டின் வரலாற்றை புறக்கணிக்கிறது காங்கிரஸ்: மோடி தாக்கு
நேரு குடும்பத்தை மட்டுமே புகழ்ந்து பேசிப் பேசி, பிற தலைவர்கள் ஆற்றிய நற்பணிகள் பற்றி பேசாமல் புறக்கணித்து நாட்டின் வரலாற்றையும் காங்கிரஸ் மாற்றிவிட்டது என்று குற்றம்சாட்டினார் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.
இந்தியாவின் வரலாற்றை பாஜக மாற்றுவதாக குறைகூறி பிரதமர் மன்மோகன் சிங் பேசிய மறுதினமே அவரது பேச்சுக்குப் பதில் கூறும் வகையில் இவ்வாறு பேசியுள்ளார்.
குஜராத் மாநிலம் கேடா பகுதியில் சிறுபான்மை இனத்தவரே நடத்தும் மருத்துவமனை ஒன்றை ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்து மோடி பேசியதாவது:
நீங்கள் (பிரதமர்) என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது என்பது உங்கள் கையில் இல்லை என்பதை நான் அறிவேன். அதே நேரத்தில் நாட்டின் புவியியல் அமைப்பை மாற்றியது யார் என் பதை அறிந்துகொள்ள நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். நீங்கள் (பிரதமர் ) பிறந்தகா கிராமம் (இப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது) ஹிந்துஸ்தானைச் சேர்ந்த பகுதியாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. நாட்டின் பூகோள அமைப்பை மாற்றியது யார்? இந்த நாட்டை துண்டாடியது யார் என்றால் காங்கிரஸ் கட்சிதான்.
நாட்டின் பூகோள அமைப்பை மாற்றியது பாஜக என்று குற்றம்சாட்டுகிறீர்கள். நமது எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவி பிரச்சினை செய்கிறது சீனா. நமது எல்லைக்குட்பட்ட நூற்றுக் கணக்கான சதுர கி.மீ. பரப்பளவு பகுதியை கைப்பற்றியது. இவை நடந்தது காங்கிரஸ் ஆட்சியில்தான். மகாத்மா காந்தி நடத்திய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை குறிக்கும் வகையில் அமைக்கவுள்ள சபர்மதி-தண்டி பாரம்பரிய சாலை வழித்தடத்தையும் மத்திய அரசு மாற்ற விரும்புகிறது.
சில மாதங்களுக்கு முன்பு எனக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதம் இந்த பாதையை 30 கி.மீ. தொலைவுக்கு அப்பால் மாற்றலாம் என்கிறது. சர்தார் படேல் மறைந்து 41 ஆண்டுகள் சென்ற பிறகே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. ஆனால் ஜவஹர்லால் நேருவுக்கும் இந்திரா காந்திக்கும் அவர்கள் உயிருடன் இருந்தபோதே வழங்கப்பட்டது.
அரசமைப்புச்சட்ட சிற்பி என போற்றப்படும் பி.ஆர்.அம்பேத்கருக்கு சுதந்திரம் பெற்று 33 ஆண்டுகளுக்குப் பிறகே இந்த விருது வழங்கப்பட்டது. அந்தமான் நிக்கோபாரில் உள்ள செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு விட்டனர். ஒரு குடும்பத்தின் புகழ் பேசுவதிலேயே காங்கிரஸ் எப்போதும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. நவீன கால கல்வியாளர் என போற்றிப் புகழப்படும் அபுல் கலாம் ஆசாத் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி ஜே.பி.கிரிபளானியின் 125வது பிறந்த தினம் நவம்பர் 11ல் வருகிறது. அந்த நாளை காங்கிரஸ் கொண்டாடவில்லை. நாட்டுக்காக தியாகம் செய்த தலைவர்கள் அனைவருக்கும் பாஜக மரியாதை செய்கிறது.
எந்த கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்று யாரையும் பாஜக பிரித்து பார்ப்பதில்லை. நாட்டுக்காக தியாகம் செய்தவராக இருந்தால் அவர் எந்த கட்சி, சமுதாயத்தை சேர்ந்தவர் என பார்க்கக்கூடாது என்றார் மோடி.
WRITE A COMMENT