Published : 19 Jul 2016 02:48 PM
Last Updated : 19 Jul 2016 02:48 PM

ஆர்எஸ்எஸ் தொடுத்த அவதூறு வழக்கில் ராகுல் மீது உச்ச நீதிமன்றம் சாடல்

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.

மகாராஷ்டிரா, தானே மாவட்டத்தில் பிவாண்டியில் மார்ச் 2014-ல் ராகுல் காந்தி பேசிய தேர்தல் கூட்டமொன்றில், “மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்கள் இன்று காந்திஜி என்று பேசுகின்றனர்” என்று கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஷ் குண்ட்டே ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமை அமர்வின் முன் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி இம்மாதிரியான ‘பொத்தாம் பொதுவான கருத்தை தெரிவித்திருக்கக் கூடாது, எனவே அவர் தான் நிரபராதி என்று நிரூபிக்கக் கடமைப்பட்டவராகிறார்’ என்று கூறியுள்ளது.

மேலும் இது குறித்த ராகுல் காந்தி தரப்பின் விரிவான வாதங்களை ஜூலை 27-ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில் இதே வழக்கு விசாரணையில் தனது கருத்துக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்கும் வாய்ப்பை வழங்கிய நீதிமன்றம் இம்முறை உரத்த குரலில் ராகுல் காந்தியை விமர்சித்தது. அன்று வருத்தம் தெரிவிக்கும் வாய்ப்பை மறுத்த ராகுல் காந்தி சார்பு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தகுதியின் அடிப்படையில் சந்திப்பதாக சவால் அளித்தனர்.

இதனையடுத்து இன்றைய விசாரணையில், ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை அவர் சந்தித்து தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x