Published : 30 Sep 2014 06:03 PM
Last Updated : 30 Sep 2014 06:03 PM
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இணைந்து பத்திரிகை ஒன்றுக்காக கூட்டுத் தலையங்கம் எழுதியுள்ளனர். இந்தத் தலையங்கம் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல தரப்பினரைச் சந்தித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் வருகிறார். அவரது உற்சாகமான மனநிலை அங்குள்ள மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் முடிவடையும் தருணத்தில், ஒபாமாவுடன் இணைந்து அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்காக கூட்டுத் தலையங்கம் ஒன்றை அவர் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தக் கூட்டுத் தலையங்கம் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில், குறிப்பிட்ட பத்திரிகையின் பெயரை இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகமும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சயீத் அக்பரூதீனிடம் செய்தியாளர்களிடம் இது குறித்து கேட்டபோது, "அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் தொழில்நுட்பத்தை மிக நேர்த்தியாக கையாண்டு மக்களை கவர்ந்தவர்கள் ஆவர்.
சைபர் உலகில் அவர்கள் வல்லவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை தங்களது நாடுகளுக்குக்கு நன்மை பயக்கும் வகையில் சில உடன்பாடுகளை விரைவில் மேற்கொள்வார்கள். அதற்காக நீங்கள் காத்திருங்கள்.
மேலும், இவர்கள் கூட்டுத் தலையங்கம் எழுதியுள்ளது உண்மைதான். இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து தங்களது நாடுகளின் நிலைப்பாட்டை முதன்முறையாக எழுத்துப்பூர்வமாக இணைந்து எழுதியுள்ளனர். இது பிரதமரின் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்" என்றார்.
அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்னர், 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பிரபல அமெரிக்க பத்திரிகைக்காக நரேந்திர மோடி தலையங்கம் எழுதியிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT