Published : 14 Feb 2014 12:00 AM
Last Updated : 14 Feb 2014 12:00 AM

மக்களவைக்கு கத்தியுடன் வந்த உறுப்பினர்: அமைச்சர் கமல்நாத் அதிர்ச்சி தகவல்

நாடாளுமன்றத்தில் மிளகுப்பொடி திரவத்தை ஸ்பிரே செய்த செயல், உறுப்பினர்களை கொல்ல முயற்சித்ததற்கு ஒப்பாகும். சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது மிக அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறினார்.

அதோடு அவையில் ஒரு உறுப்பினர் கத்தியுடன் வந்தி ருந்ததாக தனக்கு தகவல் கிடைத் ததாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: “தெலங்கானா மசோதாவை தாக்கல் செய்யவிடக்கூடாது என்பதற்காக மிளகுப்பொடி திரவத்தை ஸ்பிரே செய்வது உள்ளிட்ட செயலில் உறுப்பினர்கள் ஈடு பட்டுள்ளனர். ஒரு உறுப்பினர் கத்தி கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், நான் அதை பார்க்கவில்லை. இதுபோன்ற ஆயுதங்களை எல்லாம் அவைக்குள் எடுத்து வருவது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தும். சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்து வேறுபாடு இருந்தால் அது பற்றி முறைப்படி தெரிவிக்க நாடாளுமன்ற ஜனநாயகத்தில் வழியுள்ளது. இதுபோன்று வன் முறையில் ஈடுபடக் கூடாது. வியாழக்கிழமை நடைபெற்ற சம்பவம் எனக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவைத் தலைவர் மீராகுமாரிடம் பேசவுள்ளேன்” என்றார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறுகையில், “ரகளையில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பினர் களும் வலியுறுத்தியுள்ளனர். உறுப்பினர்களை கொலை செய்வதற்கான முயற்சியாகவே இந்த சம்பவத்தை நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.

மத்திய அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறுகையில், “தெலங்கானா மசோதா முறைப் படி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனிமேல், அது நாடாளுமன்றத்தின் சொத்து. ரகளையில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கத்தி கொண்டு வரவில்லை

இதற்கிடையே தான் கத்தி கொண்டு வந்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு. தலைமைச் செயலர் மேஜையில் இருந்த மைக்கை பறித்து கையில் வைத்திருந்தேன். அதை பார்த்த சிலருக்கு கத்தி போன்று தோன்றி யிருக்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x