Published : 26 Dec 2013 12:00 AM
Last Updated : 26 Dec 2013 12:00 AM
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். சட்டமன்றத்தில் ஜனவரி 3-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அக்கட்சியை துணைநிலை ஆளுநர் கேட்டுக்கொள்வார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “டெல்லியில் அரசு அமைப்பது தொடர்பான குடியரசுத் தலைவரின் ஒப்புதல் உள்துறை அமைச்சகத்துக்கு வந்தது. இதை
நாங்கள் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு அனுப்பியுள்ளோம். புதிய அரசு பதவயேற்பு விழாவை எப்போது, எங்கு நடத்தலாம் என்பதை நஜீப் ஜங் முடிவு செய்வார்” என்றார்.
இதனிடையே டெல்லி தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “டெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்கும் நாளில் இருந்து 7 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக்கொள்ளலாம் என குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பதவியேற்பு
இதனிடையே, டெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் வரும் சனிக்கிழமை (டிசம்பர் 28) ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் குமார் விஷ்வாஸ் நிருபர்களிடம் கூறும்போது, “பதவியேற்பு விழாவை வரும் சனிக்கிழமை நடத்தலாம் என துணை நிலை ஆளுநரிடம் நாங்கள் கேட்டுக்
கொண்டோம். அவர் அதனை ஏற்றுக்கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும்” என்றார்.
6 பேர் அமைச்சர்கள்
கேஜ்ரிவால் தவிர, மணீஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, சத்யேந்திர குமார் ஜெயின், ராக்கி பிர்லா, கிரிஷ் சோனி, சவுரப் பரத்வாஜ் ஆகிய 6 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. பதவியேற்பு விழாவில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, அவரது குழுவைச் சேர்ந்த கிரண் பேடி, சந்தோஷ் ஹெக்டே உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
15 நாட்களில் ஜன் லோக்பால் மசோதா
அரசு பதவியேற்பதில் இருந்து ஒரு வாரத்துக்குள் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்பது அர்விந்த் கேஜ்ரிவாலின் முக்கிய வாக்குறுதி. ஆனால் இந்த மசோதா நிறைவேற்றுவது தள்ளிப் போகிறது.
டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்படாததால், அது நிறைவேற்றும் முக்கிய சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெறவேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில், “டெல்லி மாநில அரசு, தான் விரும்பும் ஒரு சட்டத்தை நிறைவேற்ற குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறவேண்டும் என்ற விதி தவறானது. இதுபோன்ற விதி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தது.
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையவுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். ஒவ்வொரு தடையையும் கடந்து வருவோம். இது அரசியலமைப்பு சட்ட சிக்கல் அல்ல; எதிர்க்கட்சியினர் ஏற்படுத்தும் சிக்கல். அனைத்து தடைகளையும் கடந்துவந்து டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ஜன் லோக்பால் மசோதாவை நாங்கள் 15 நாட்களுக்குள் கொண்டு வருவோம்” என்றார்.
பதவியேற்ற 24 மணி நேரத்தில் டெல்லி
வாசிகளுக்கு 700 லிட்டர் குடிநீர் வழங்கப்படும் எனவும், மின்சாரக் கட்டணம் பாதியாக குறைக்கப்படும் எனவும் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார்.
டெல்லியில் கடந்த 4-ம் தேதி நடபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 28 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றுள்ளது. இத்தேர்தலில் 8 இடங்களில் வென்றுள்ள காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி அரசை வெளியில் இருந்து ஆதரிக்கிறது. 31 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக ஆட்சிமைக்க விரும்பவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT