Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

பெண்ணை வேவு பார்த்த விவகாரம்: மோடிக்கு எதிராக பிரதமரிடம் காங்கிரஸ் புகார்

இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தில் குஜராத் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் காங்கிரஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் இளம் பெண் ஒருவரின் நடவடிக்கைகளை வேவுபார்க்க முதல்வர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருந்த அமித் ஷா, காவல்துறைக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக அமித் ஷாவுக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.எல்.சிங்காலுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பதிவை சில இணையதள செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு பெண்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்டுள்ள இந்த மனுவை குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, பிரதமரிடம் வியாழக்கிழமை அளித்தார். பின்னர் அர்ஜுன் மோத்வாடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அந்த இளம்பெண் மற்றும் அவரின் குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வேவு பார்க்கும் பணியை மோடி அமைச்சரவையில் இருந்த அமித் ஷா மேற்கொண்டார். அதோடு, குஜராத்தில் மாதந்தோறும் 93 ஆயிரம் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

எனவே, இந்த விவகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் கோரினேன். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியின் செல்போன் பேச்சு பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தபோது, வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதே போன்று குஜராத் இளம்பெண் விவகாரம் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். பாகிஸ்தான் சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன்” என்றார்.

நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு

மேலும் இதை விசாரிக்க நீதிபதி தலைமையில் குழுவை அமைப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.

ஆனால், சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை, இந்த விவகாரத்தை விசாரிக்க தேவையில்லை என்று குஜராத் மாநில பெண்கள் நல ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

“இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பெண்கள் அமைப்பினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகார் கடிதங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசுத் தலைவர் அனுப்பிவைத்தார்.

அந்த கடிதங்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது. விசாரணைக்கு உத்தரவிடும் முன்பு சில நடைமுறை களை பின்பற்ற வேண்டியுள்ளது. மத்திய அரசின் இந்நடவடிக்கையை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயல் என யாரும் கருதிவிடக் கூடாது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் விவரங்களை திரட்டி வருகிறோம். கூடிய விரைவில் விசாரணைக்கு உத்தரவிடுவது தொடர்பாக நாங்கள் முடிவு செய்வோம்” என்றார்.

இந்தப் புகாரை விசாரிக்க குழு ஒன்றை அமைப்பதென்றால், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பின், விசாரணையை மேற்கொள்ள ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்குமாறு உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பும்.

அதன் அடிப்படையில் அமைக்கப்படும் விசாரணைக் குழு, சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து விசாரிக்கும். மாநில போலீஸாரின் விசாரணையை விட, உச்ச நீதிமன்றக் குழு நடத்தும் விசாரணை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x