Published : 26 Apr 2017 06:29 PM
Last Updated : 26 Apr 2017 06:29 PM
இடதுசாரி இயக்க முக்கியத்தலைவர்களில் ஒருவரும் கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் தேனேரி ஸ்ரீ ராமர் தீர்த்தம் கோயிலுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் என்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பாலக்காடு, எலப்புள்ளி பாறையில் மிகவும் பிரபலமாக விளங்குவது தேனேரி ஸ்ரீராமர் தீர்த்தம் கோயில். இந்த கோயிலுக்கு அருகாமையில் சீதா, ராம, லட்சுமணர் வனவாசம் வருகையில் சீதைக்கு தாகம் எடுத்ததாகவும், அதற்காக அங்கிருந்த சங்கு சக்கர பாறையில் ஊற்று உண்டு பண்ண அதில் கொஞ்சமே நீர் வந்ததாகவும், அதைத்தொடர்ந்து லட்சுமணர் அம்பு எய்த அது விழுந்த இடத்தில் நீர் ஊற்று பெரிதாக வந்தாலும் அது உப்புக்கரித்ததாகவும், அதன் தொடர்ச்சியாக ராமர் அம்பு எய்த இடத்தில் சுவையான நீர் ஊற்று கொப்பளித்ததாகவும் அதை அருந்தி சீதை தாகம் தீர்த்ததாகவும் ஐதீகம். இங்கே அந்த ஊற்று இன்றைக்கும் கொப்பளித்து குளமாக தேங்குகிறது. இதற்கு ராமதீர்த்தம் என்று பெயர்.
கி.பி. 1600-ம் ஆண்டுகளிலேயே இங்கே கோயில் இருந்ததாகவும், பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தியதாகவும், இந்த தீர்த்தத்தில் குளித்தால் திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு குறைகளும் நீங்குவதாகவும், காசிக்கு, ராமேசுவரத்திற்கு செல்ல முடியாதவர்கள் (ஆடி அமாவாசை, நவமி தினங்கள், தீபாவளி உள்ளிட்ட நாட்களில் இங்கே நல்ல விசேஷம்) இங்கே வந்து குளித்து தம் தோஷம் நீங்கி செல்வதாகவும் இன்றும் புகழப்படுகிறது.
இந்த கோயிலுக்கு காஞ்சி மகா பெரியவர் 1924ல் வந்திருக்கிறார். இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஸ்ரீராம தீர்த்தம் கேரள தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இருந்தாலும் பெரியதாக வருமானம் இல்லாததால் தனியார்களே கமிட்டி அமைத்து கும்பாபிஷேகம் மற்றும் விழாக்களை நடத்தி வருகிறார்கள். இந்த தீர்த்தத்திற்கு தமிழகத்திலிருந்தே 90 சதவீதம் மக்கள் வருகிறார்கள்.
ராமர், லட்சுமணர் ஒருங்கே வீற்றிருக்கும் கற்பக கிரகத்திற்கு முன்பு உள்ள ஊற்றில் வற்றாத சுனையாக கொப்பளிக்கும் நீரை கிணறு போல் தேக்கி கோயிலுக்கு வெளியே நந்தியின் மூலம் விடுகிறார்கள். அது பெரிய குளமாக தேங்குகிறது. அதில் ஆண்கள், பெண்கள் தினசரி நூற்றுக்கணக்கில் குளிக்கிறார்கள். இதில் உள்ளூர்காரர்களும் நிறைய வருகிறார்கள். தவிர இறந்தோர் திதி, தர்ப்பணம் செய்யவும் மக்கள் வருகிறார்கள்.
(தேனேரி தீர்த்த குளம், கோயில் கமிட்டி தலைவர் கோபாலகிருஷ்ணன்)
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்த்த குளத்தில் உள்ளூர்காரர்கள், பக்தர்கள், ஆண், பெண்கள் தனித்தனியே குளிப்பதற்கு வசதியில்லை. அதற்கு தடுப்புச்சுவர் எழுப்ப சுமார் ரூ.5 லட்சம் செலவு பிடிக்கும். கடந்த ஆண்டுதான் கமிட்டியினர் பெரும் செலவு செய்து கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள். இந்த தடுப்புச்சுவர் கட்டுவதற்கு நிதியுதவி செய்ய தொகுதி எம்.எல்.ஏவும் (மலம்புழா), இடதுசாரி இயக்க முக்கியத் தலைவரும் முன்னாள் கேரள முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தனை அணுகியிருக்கிறார்கள். அவரும் தடுப்புச்சுவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்தை அளித்திருக்கிறார்.
இதுகுறித்து இந்த தேனேரி கோயில் கமிட்டி தலைவரும், எலப்புள்ளி பஞ்சாயத்தின் 16-ம் வார்டு உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ''நாங்கள் பலர் பாஜகவில் இருந்தவர்கள்தான். அவங்க செயல்பாடு பிடிக்காம இடதுசாரி அணிக்கு வந்தவங்களாக்கும். இருந்தாலும் நாங்கள் சுதந்திரமாக கோயில் நல்ல காரியங்கள் செஞ்சுட்டு வர்றோம். எங்க பஞ்சாயத்தில் மொத்தம் 22 வார்டுகள். அதில் 18 உறுப்பினர்கள் எல்.டி.எப் சேர்ந்தவர்கள்தான். அச்சுதானந்தன் போனவருஷம் தன் எம்.எல்.ஏ நிதியில் இங்குள்ள ஒரு பள்ளிக்கூட கட்டிடம் கட்ட உதவி செய்திருந்தார். அப்பவே நாங்க போய் பார்த்து கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைத்தோம். வர்றேன்னு சொன்னார். வர முடியலை.
அந்த நேரத்தில் கட்சியின் ஜில்லா கமிட்டியிலும், கிளை கமிட்டியிலும் கோயில் குளத்திற்கு கரை கட்ட நிதி வேண்டும்னு கோரிக்கை வைத்திருந்தோம். முறைப்படி மனு கொடுக்க சொன்னாங்க. அதுக்கப்புறம் எம்.எல்.ஏ நிதியில கட்டப்பட்ட பள்ளிக்கூட கட்டிடத்தை திறந்து வைக்க வந்திருந்தார் அச்சுதானந்தன். அப்ப நாங்க கோயில் குளம் சுவர் கட்ட நிதி வேண்டி மனு கொடுத்தோம். உடனே ரூ. 5 லட்சம் சேங்ஷன் பண்ணிக் கொடுத்துட்டார்.
அதற்கப்புறம் குளக்கரை கட்ட டெண்டரும் கொடுத்தாச்சு. அது வேலை தொடங்கி இன்னமும் ஒரு மாதத்துல முடிஞ்சிடும். அதை திறந்து வைக்க வி.எஸ். அச்சுதானந்தனை அழைக்கணும். இயக்கத்தின் பிரகாரம் அவங்க சாமி கும்பிடற வழக்கமில்லைதான். கடவுள் மறுப்பாளர்கள்தான். ஆனாலும் பக்தர்கள் உணர்வுகளை மதிக்கிறவங்க. அதனால அவர் கோயிலுக்கு வர்றதுல ஒரு பிரச்சனையும் இல்லை!'' என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து பாலக்காடு ஜில்லா மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ''கேரளத்தில் கொச்சின் தேவசம்போர்டு, மலபார் தேவசம்போர்டு, திருவிதாங்கூர் தேவசம்போர்டுன்னு மூன்றும் கோயில்களுக்கு வேண்டிய பணிகளை எல்லாம் செய்கிறது. அப்படி செய்ய முடியாத பணிகளை எம்.எல்.ஏ., எம்.பிக்களும் செய்கிறார்கள். அதில் எல்.டி.எப் உறுப்பினர்களும் விதிவிலக்கில்லை. அந்த முறையில் வி.எஸ். அச்சுதானந்தனும் பணிகள் செய்துள்ளார். இதில் அதிசயக்க ஒன்றுமேயில்லை!'' என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT