Published : 23 Feb 2017 09:40 AM
Last Updated : 23 Feb 2017 09:40 AM

தனி தெலங்கானா உருவானதால் ஏழுமலையானுக்கு ரூ.5.59 கோடி மதிப்புள்ள நகைகள் காணிக்கை: முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார்

தனி தெலங்கானா மாநிலம் உருவாக வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து திருப்பதி ஏழுமலையானுக்கு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று ரூ.5 கோடியே 59 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைக் காணிக்கையாக வழங்கினார்.

இதற்காக நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் தனது குடும்பத்தார், முக்கிய அமைச்சர்கள் என 56 பேருடன் சந்திரசேகர ராவ் ரேணிகுண்டா வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் திருமலை சென்றடைந்த அவருக்கு, தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு தேவஸ்தான விடுதியில் தங்கி ஓய்வெடுத்த அவர், நேற்று காலை தனது குடும்பத்தாருடன் சென்று ஏழுமலையானைத் தரிசித்தார். பின்னர் அவர் 14.2 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட சாலிக்கிராம ஹாரம் மற்றும் 4.6 கிலோ எடையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட 5 வரிசை கண்ட ஆபரணத்தை தேவஸ்தான அதிகாரிகளிடம் காணிக்கையாக வழங்கினார். இந்த நகைகள் ரூ.5 கோடியே 59 லட்சம் செலவில், தெலங்கானா அரசு சார்பில் உருவாக்கப்பட்டது.

பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரசேகர ராவ், ‘‘ஏழுமலையான் தரிசனம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆந்திரா, தெலங்கானா மாநில மக்கள் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும், என பிரார்த்தனை செய்தேன். மேலும் இரு மாநிலங்களும் வளர்ச்சியில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்றும் ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன்’’ என்றார்.

திருமலையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து திருச்சானூர் சென்று, பத்மாவதி தாயாரைத் தரிசித்து 47 கிராம் எடை கொண்ட தங்க மூக்குத்தியை காணிக்கையாக செலுத்தினார். இதைத் தொடர்ந்து ரேணிகுண்டா சென்று, தனி விமானம் மூலம் மீண்டும் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் வந்திருந்த அம்மாநில வேளாண் துறை அமைச்சர் போச்சாரம் ஸ்ரீநிவாஸ் ரெட்டிக்கு நேற்று காலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. தரிசனம் முடித்து கோயிலுக்கு வெளியே வந்த அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக திருமலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த கொதிப்பு காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர் ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x