Published : 05 Sep 2016 12:34 PM
Last Updated : 05 Sep 2016 12:34 PM

வெளிப்படைத் தன்மைக்காகவே நான் போராடுகிறேன்: உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்

உச்ச நீதிமன்ற கொலீஜியம் சந்திப்புகளிலிருந்து தான் விலகுவதாக தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரிடம் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்தி செலமேஸ்வர், வெளிப்படைத்தன்மைக்காகவே தான் போராடுவதாகத் தெரிவித்தார்.

கொலீஜியம் உறுப்பினரான் நீதிபதி செலமேஸ்வர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழிடம் பேசினார். 2 பத்தாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் முறையை அதன் மூடுண்ட, வெளிப்படைத்தன்மையின்மைக்காக காட்டும் எதிர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சில கொலீஜியம் உறுப்பினர்களுக்கே நீதிபதிகள் நியமனம் எப்படி நடைபெறுகிறது என்பதை அறிய முடிவதில்லை என்று இவர் கடிதம் ஒன்றில் வெளிப்படுத்தினார்.

“என்னுடைய நிலைப்பாட்டில் எனக்கு சொந்தக் காரணங்கள் எதுவும் இல்லை. நீதித்துறை நியமனங்கள் ஒரு புறவயமான அளவுகோல்களின் படி செய்யப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. நியமனங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர நீதித்துறை முறைமை ஒன்றை வளர்த்தெடுப்பது அவசியம். ஏனெனில் மத்திய அரசின் வாதங்களையும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய நாடாளுமன்ற சட்டம் ஆகியவற்றை மறுக்கும் போது கொலீஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்கிறேன்.

இது ஒரு கொள்கைபூர்வமான நிலைப்பாடே தவிர எனது சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவல்ல. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் நான் ஓய்வு பெறப்போகிறேன். ஓய்வுக்குப் பிறகான பணிக்காக நான் யார் தயவையும் எதிர்பார்க்கவில்லை. இந்த கமிஷன் அந்த கமிஷன் என்று பணியாற்றுபவனும் அல்ல நான். எனக்கு சுயநலம் எதுவும் இல்லை, கொலீஜியம் முறை செயல்பாடுகள் மீது எனது ஆட்சேபனையில் எனது சொந்த நலன்கள் எதுவும் இல்லை” என்றார்.

மேலும் கொலீஜியம் நடைமுறைகளுக்கு ஒரு பதிவு வேண்டும். அதாவது எந்த அடிப்படையில் நீதிபதி இடமாற்றங்கள் நடைபெறுகிறது, எந்த அடிப்படையில் நீதிபதிகள் நியமனங்களில் சில பெயர்கள் மறுக்கப்படுகின்றன. கொலீஜியம் கூட்டங்கள் நடைபெறுவதில் உயர்மட்டத்தில் ஒரு முறைமையைப் புகுத்துவது அவசியம் என்கிறார் செலமேஸ்வர்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை நீக்கிய தீர்ப்பில் கூட கொலீஜியம் முறை மேம்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் எதிர்ப்பு காட்டி வரும் செலமேஸ்வர், “நான் கொலீஜியம் கோப்புகளைப் பார்த்து என்னுடைய கருத்துகளை தெரிவித்தேன். அப்படித்தான் நடைமுறை, ஆனால் இனிமேல் கொலீஜியம் கூட்டங்களுக்குச் செல்லப்போவதில்லை” என்றார்.

“இந்த விவகாரம் குறித்து பொதுவிவாதம் இருக்க வேண்டும். நீதித்துறை நியமனங்கள் பொதுமக்கள் சமாச்சாரம் என்பதால் அவர்களுக்கும் பங்கிருக்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படி இதிலிருந்து வெளியே நிறுத்த முடியும்?” என்றார்.

நீதிபதிகள் தங்கள் பணிச்சுமை, நிலுவை வழக்குகள், இப்படி நேரமின்மையால் அவதியுறும்போது குவியும் நீதிபதிகள் நியமனப் பட்டியல்களை ஒழுங்காக ஆராய்ந்து அப்பழுக்கற்ற முடிவுகளை எடுக்க முடியுமா? என்று கேட்ட போது, “நான் உங்களுக்கு ஒரு உதாரணம் கூறுகிறேன், ஆண்டுக்கு 150 நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். புதிய நீதிபதி நியமனத்துக்கான தகுதிகளை சோதனை செய்வது ஒன்றும் பெரிய கடினமல்ல. சரி! ஒரு ரிப்போர்ட்டர் காலியிடம் உருவாகிறது நீங்கள் என்ன செய்வீர்கள்? வேலைக்கு விண்ணப்பித்த ஒருவரை அழைத்து அவரிடம் பேசுவீர்கள், அவரைப் பற்றி கேள்வி கேட்பீர்கள். இதே நடைமுறையை நீதிபதிகள் நியமனத்திலும் கடைபிடிக்க முடியும். ஒவ்வொரு கொலீஜியம் உறுப்பினரும் நீதிபதி காலியிடங்களுக்கு வரும் பெயர்களுடன் அரைமணி நேரம் செலவிட முடியும். அவரது திறமைகள் பற்றி கேட்டறிய முடியும், மதிப்பிட முடியும், அவரது கருத்து தொடர்பு புலப்படுத்த திறமை என்னவென்று அறிய முடியும். அவர் மதிப்புக்குரியவர்தானா என்பதையெல்லாம் இந்த நடைமுறையில் செய்து விட முடியும். இவற்றையெல்லாம் 2 நாட்களில் செய்து விடமால், ஏனென்றால் 150 காலியிடங்களும் ஒரே நாளில் உருவாகப்போவதில்லை” என்றார்.

நீதிபதிகள் நியமனத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் ஆலோசனையின் படி நியமனம் நடைபெற வேண்டியதில்லை என்று கூறும் செலமேஸ்வர். உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் சிபாரிசுகள் உயர் நீதிமன்ற உள்ளூர் நீதிபதி ஒருவரின் முன் அனுமானங்களை நம்பி இருக்க முடியாது என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x