Published : 28 Jan 2017 09:35 AM
Last Updated : 28 Jan 2017 09:35 AM
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து விமர்சித்த மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரி மீது வழக்கு பதிவு செய்யுமாறு கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தை முன்மாதிரியாக கொண்டு, ஆந்திர மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது. ஆளும் கட்சி தெலுங்கு தேசம், கூட்டணி கட்சியான பாஜக.வுக்கு எதிராக ஆந்திராவில் அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஒன்று சேர்ந்துள்ளன.
இந்த போராட்டத்தை குடியரசு தினத்தில் தொடங்க முயன்றபோது, முளையிலேயே கிள்ளும் விதமாக ஆந்திர அரசு அனைத்து இடங்க ளிலும் போலீஸாரை குவித்து, கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், மாணவர்கள் என அனைவரையும் கைது செய்தனர். இதனால் முதல் நாள் போராட்டத்தில் நடைபெற இருந்த மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெறவில்லை.
இந்நிலையில், மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரி செய்தி யாளர்களிடம் பேசும்போது “மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு பதில், சிறப்பு நிதி வழங்குவதாக பிரதமர், நிதி அமைச்சர் அறிவித்துள்ளனர். எனவே, எதிர்க்கட்சியினர் போராட்டம் தேவையற்றது. தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஆந்திராவில் நடத்த வேண்டிய அவசியமும் இல்லை. தேவைப்பட்டால் இங்கு பன்றி பந்தயம், கோழி பந்தயம் போன்றவற்றை எதிர்க்கட்சிகள் நடத்தி கொள்ளலாம்” என கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மீண்டும் ஆந்திர மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். திருப்பதியில் நடந்த ஆர்ப்பாட்டத் தில் கம்யூனிஸ்ட் கட்சினர் வாயில் கறுப்புத் துணி கட்டி முழங்கால் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் சாலை மறியலிலும் ஈடு பட்டனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் தீவிர ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
மத்திய அமைச்சர் மாநில சிறப்பு அந்தஸ்து போராட்டத்தை இழிவாக பேசியதாக நேற்று கிருஷ்ணா மாவட்டம், இப்ராகிம்பட்டினம் காவல் நிலையத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் புகார் அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT