Published : 28 Jun 2019 07:34 PM
Last Updated : 28 Jun 2019 07:34 PM
மருத்துவக்கல்வியின் மத்தியத்தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அளிக்க தமிழக எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்காக இன்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், பொதுச்செயலாளரான டி.ரவிகுமாரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷவர்தனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: மருத்துவக்கல்வியின் பட்டப்படிப்பிலும், பட்டமேற்படிப்பிலும் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகிதம் அளிக்கப்படுவதில்லை.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழக்கின்றனர். தமிழ்நாட்டின் 25 மருத்துவக்கலூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 3,250.
இதில், மத்தியத்தொகுப்பிற்கு அளிக்கப்படும் 15 சதவிகித எம்பிபிஎஸ் இடங்கள் 490. அதில் 27 சதவிகிதம் கணக்கிட்டால் 132 இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.
அதேபோல், பட்டமேற்படிப்பில் தமிழ்நாட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 1758 மாணவர்கள் பயிலும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இவற்றில், மத்தியத்தொகுப்பிற்கு 879 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அதில் 27 சதவிகிதம் கணக்கிட்டால் 237 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்கவேண்டும். இவ்விரண்டு மருத்துவக்கல்விகளிலும் சேர்த்து மொத்தம் 369 மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பயிலும் வாய்ப்பு பறிக்கப்படுகிறது.
இதற்கு அவர்களுக்கு மத்தியத்தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு அளிக்கப்படாதது காரணம் ஆகும். இந்த அநீதி களையப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு மத்தியத்தொகுப்பு இடங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும், பொதுச்செயலாளரான டி.ரவிகுமாரும் தனித்தனியாக மனு அளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT