Published : 21 Sep 2018 12:42 PM
Last Updated : 21 Sep 2018 12:42 PM
காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாதிகளால் இன்று காலை கடத்திச் செல்லப்பட்ட மூன்று காவலர்கள் சோபியான் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி தி இந்துவிடம் (ஆங்கிலம்) தெரிவிக்கையில், ‘‘சோபியான் மாவட்டத்தில் உள்ள லம்னி-வங்காம் கிராமத்தில், புல்லட் குண்டுகள் துளையிட்ட மூன்று போலீஸாரின் இறந்த உடல்கள் கிடந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புபடையினரின் ஒரு குழு இப்பகுதியில் நிறுத்தப்பட்டு காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை தெற்கு காஷ்மீரின் சோபியான் பகுதியில் காவலரின் சகோதரர் உள்ளிட்ட நால்வரை அவர்களது வீட்டிலிருந்து தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
உயிரிழந்த காவலர்களில், பேத்கண்ட் கிராமத்தைச் சேர்ந்த பிர்தவுஸ் அகமது குச்சே மற்றும் குல்தீப் சிங், காப்ரான் கிராமத்தைச் சேர்ந்த நிஸார் அகமது தோபி மற்றும் பியாஸ் அகமது பட் என அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதில் ஒரு காவலரின் சகோதரர் நிஸார் அகமது என்பவர் மட்டும் உயிரோடு விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேடுதல் வேட்டையில் தொடர்புடைய தீவிரவாதிகள் இத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சோபியானில் உள்ள மசூதி ஒன்றில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், ''காவலர்கள் தங்கள் பணியை விட்டு வெளியேற வேண்டும்'' என்று கேட்டுக்கொள்ளும்விதமாக அங்கிருந்த ஒலிபெருக்கியில் அறிவித்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் வரும் அக்டோபர் 8 முதல் உள்ளாட்சி மற்றும் நகரசபை தேர்தலுக்கு தயாராகிவரும் சூழ்நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT