Published : 17 Sep 2018 01:45 PM
Last Updated : 17 Sep 2018 01:45 PM
கடந்த 1947-ம் ஆண்டில் நிகழ்ந்ததுபோல், 2047-ம் ஆண்டில் இந்தியா மீண்டும் மத ரீதியிலான பிரிவினையை எதிர்கொள்ளப் போகிறது என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவு ஒன்றில், “ கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா மத ரீதியில் பிரிக்கப்பட்டது. அதேபோன்ற சூழல் 2047-ம் ஆண்டு நிகழப் போகிறது. கடந்த 72 ஆண்டுகளில் மக்கள்தொகை 33 கோடியில் இருந்து 135.7 கோடியாக அதிகரித்துவிட்டது.
அதிகரித்து வரும் மக்கள்தொகைப் பெருக்கத்தால் பல்வேறு பிரிவினைகள் உண்டாகும். ஏற்கெனவே சிறப்புச் சட்டம் 35ஏ குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் போது, அடுத்து வரும் ஆண்டுகளில் பாரதம் என்று கூறுவது கடினமாகிவிடும்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் ட்வீட் குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர் பதில் அளித்ததாவது:
''கடந்த 1947-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றபோது மக்கள் தொகை 33 கோடிதான். ஆனால், 2018-ம் ஆண்டில் அது 135 கோடியாக உயர்ந்துவிட்டது. ஆனால், அதில் இந்துக்களின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. 54 மாவட்டங்களில் இந்துக்கள் தொகை குறைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால், சமூக சமத்துவம் அல்லது வளர்ச்சி, மேம்பாட்டைக் கொண்டுவர இயலாது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கொள்கைகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் வாக்கு வங்கி அரசியல் இருக்கும் போதும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த தனிக்கொள்கை வகுப்பது என்பது சாத்தியமில்லை. ஆனால், ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்று விரும்பினால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தக் கொள்கை அவசியம்''.
இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT