Published : 25 Sep 2018 09:12 PM
Last Updated : 25 Sep 2018 09:12 PM
முஸ்லிம் இளைஞரோடு ஏன் பழகினாய் எனக் கேட்டு இளம் பெண் ஒருவரை மீரட் போலீஸார் அடித்து உதைத்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். அங்குள்ள மீரட் நகர போலீஸார் ஒரு பெண்ணை அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகின.
அந்த வீடியோவில் ஒரு பெண்ணை, ஒரு பெண் போலீஸார் உள்பட 3 போலீஸார் அடித்து உதைத்து ஜீப்பில் ஏற்றிச் செல்கின்றனர். அந்தப் பெண்ணிடம் நீ இந்துவாக இருந்துகொண்டு ஒரு முஸ்லிம் இளைஞரோடு ஏன் பழகுகிறாய், இந்து இளைஞர் இல்லையா என்று ஆண் போலீஸார் கேட்டு அந்தப் பெண்ணைத் தாக்குகின்றனர். மேலும், பெண் போலீஸார் ஒருவரும் அந்தப் பெண்ணைக் கன்னத்தில் அறைந்த காட்சியும் அதில் இருக்கிறது.
இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. மீரட் மருத்துவக் கல்லூரி அருகே இந்தப் பெண்ணும், முஸ்லிம் இளைஞர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இதைப் பார்த்த விஎச்பி அமைப்பினர் இருவரையும் தாக்கி, போலீஸுக்குத் தகவல் அளித்தனர். போலீஸார் அங்கு இருவரையும் தனித்தனி வாகனங்களில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதப்பொருளானது. உத்தரப் பிரதேச போலீஸாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட தலைமைக் காவலர் சலேக் சந்த், கான்ஸ்டபிள் நீது சிங், பெண் போலீஸ் பிரியங்கா ஆகியோரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை உ.பி.போலீஸார் தங்களின் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT