Published : 15 Sep 2018 08:21 AM
Last Updated : 15 Sep 2018 08:21 AM
கைலாச மானசரோவர் யாத்திரையின் மூலம் சிவனின் அருளைப் பெற ராகுல் காந்தி சென்றிருக்கிறார்; அதன் மூலம் பாஜகவைக் கலங்கடித்துவிட்டார். “உங்கள் கைலாச-மானசரோவர் யாத்திரை அற்புதம் ராகுல்” என்று ஒற்றை வரியில் பாஜக வரவேற்றிருந்தால் பிரச்சினை அத்துடன் முடிந்திருக்கும். சிவன் கூட ஆமோதித்திருப்பார்.
மக்களவையில் காங்கிரஸைப் போல ஆறு மடங்கு உறுப்பினர்களை வைத்திருக்கும் பாஜகவோ பீதியடைந்தது. மத்திய அமைச்சர் ஒருவர் ராகுல் வைத்திருக்கும் கைத்தடியின் நிழல் தரையில் விழவில்லை, அது போட்டோ-ஷாப் செய்த புகைப்படம்தான் என்று துப்பறிந்து ட்விட்டரில் உடனே தெரிவித்தார்.
கடவுள் நம்பிக்கையற்றவரான நேரு மீதே பாஜகவுக்கு எப்போதும் கண். அவரைப் போலவே அவருடைய குடும்ப வாரிசுகளும் இருப்பார்கள், அதை வாக்காளர்களிடம் சொல்லி அறுவடை செய்துவிடலாம் என்பது அவர்களுடைய எண்ணம்.
இந்திரா காந்தி எப்போதும் ருத்திராட்ச மாலை அணிந்திருப்பார். கோயில்களுக்கும் மடாலயங்களுக்கும் செல்வார். பாபாக்களையும் தாந்த்ரீகர்களையும் சந்திப்பார். அயோத்தியில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ராமர் கோயிலின் கதவைத் திறந்த ராஜீவ் காந்தி, ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் பூஜைக்கும் அனுமதி தந்தார். 1989 தேர்தல் பிரச்சாரத்தை அயோத்தியில் தொடங்கியதுடன், ராம ராஜ்யத்தை அளிப்பேன் என்று வாக்குறுதியும் தந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பத்தாண்டு ஆட்சி, மோடி-ஷா பாஜகவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இடதுசாரிகள் ஆதரவிலான முதல் ஐந்தாண்டு ஆட்சியில் மத ஆதரவுச் செயல் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை.
நேரு கடைப்பிடித்த மதச்சார்பின்மைக் கொள்கையை இந்திரா அவருடைய காலத்திலேயே கைவிட்டுவிட்டார். ஆனால் மதச் சிறுபான்மையோரைக் காக்கும் கொள்கையையும் பின்பற்றினார். ராகுல் காந்தி இன்னும் சில அடிகள் மேலே எடுத்து வைத்திருக்கிறார். பூணூல் அணிந்த இந்து என்று தன்னை அறிவித்துக் கொள்கிறார். மக்களவை தேர்தல் பணியை தொடங்குவதற்கு முன்னால் திபெத்துக்குச் சென்று கைலாச மானசரோவர் யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். அரசியல் வியூக ரீதியில் இதன் காரணத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.
‘மாவோயிஸ ஆதரவாளர்கள்’ என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு ராகுல் காந்தி உடனடியாகத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பதும் காங்கிரஸ்காரர்களுக்கே வியப்பாக இருக்கிறது.
‘நகர்ப்புற நக்ஸல்கள்’ (அர்பன் நக்ஸல்கள்) என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு தருவது உள்ளுணர்வால் ஏற்பட்ட செயல். இப்போது கைதுக்கு உள்ளானவர்களில் 4 பேர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாலும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்கள் அல்லது நடமாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவர் ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்தவர்; இன்னொருவர் விசாரணைக் கைதியாக இருந்தவர். இன்னொருவர் ‘யுஏபிஏ’ பயங்கரவாதத் தடைச் சட்டப்படி தண்டனை அனுபவித்தவர். அறிவுஜீவிகள் நக்ஸல்களுக்கு உடந்தையாக இருப்பதாக அப்போதும் கூறப்பட்டது. நக்ஸல் தலைவர்கள் கோபாட் கண்டி, ஜி.என். சாய்பாபா இருவருமே காங்கிரஸ் கூட்டணி அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆசாத், கிஷண்ஜி என்ற இரு முக்கிய நக்ஸல்கள் அரசின் ரகசிய முகமைகளால் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் சிந்தல்நார் என்ற இடத்தில் பாதுகாப்புப் படைகளுக்குப் பெருத்த பின்னடைவு ஏற்பட்டபோது, ‘கிழக்கு-மத்திய இந்தியாவில் கடுமையான நடவடிக்கைகள் வேண்டாம்’ என்று அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை, சோனியாவை எளிதில் அணுகும் வாய்ப்பு பெற்ற செல்வாக்குள்ள காங்கிரஸ்காரர்கள் தடுத்தனர். நீல நட்சத்திர நடவடிக்கைக்குப் பிறகு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினர் பலியானது அப்போதுதான். நக்ஸல்களைக் காட்டுக்குள் தள்ளும் நடவடிக்கை தொடங்கியபோது ஒடிசாவில் கடத்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியை விடுவிக்க, நக்ஸல் ஒருவரின் மனைவி விடுவிக்கப்பட்டார். தேசத்துரோக வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஹர்ஷ் மந்தர், விநாயக் சென் ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். மத்திய திட்டக்குழுவின் சுகாதாரக் குழுவில் சென் கொண்டுவரப்பட்டார். அந்த வகையிலான குழப்பம் இப்போது மீண்டும் திரும்புகிறதா?
குஜராத்தில் கிட்டத்தட்ட தோல்வியைத் தழுவியதால் மோடி-அமித் ஷா பாஜக, 2019 மக்களவை பொதுத் தேர்தலை பொருளாதாரச் செயல்பாட்டின் அடிப்படையில் சந்திக்கத் துணியாது என்று கணித்திருந்தேன். எனவே அவர்கள் இந்துத்துவா, ஊழல் எதிர்ப்பு, தீவிர தேசியவாதம் ஆகியவற்றைப் பிரச்சாரத்தில் இறக்கிவிடுவார்கள். பாஜகவின் தீவிர இந்துத்துவாவுக்கு மறுமொழியாக மிதவாத இந்துத்துவாவை சோதித்துப் பார்க்கிறார் ராகுல். ஊழல் விவகாரத்தில் பாஜகவை குறைகூறி காங்கிரஸால் ஆதரவைப் பெருக்கிவிட முடியாது, காரணம் அது தன்னுடைய பெயரை நிறையவே கெடுத்துக்கொண்டுவிட்டது.
நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளின் ஒவ்வொரு முயற்சியும் இந்தியாவில் முறியடிக்கப்பட்டே வந்துள்ளன. தீவிர இடதுசாரி இயக்கங்கள் விஷயத்திலும் இதுதான் நடந்துள்ளது. இந்தியாவின் எந்தப் பகுதியையும் இந்தியா இழந்தது கிடையாது, தேசப் பாதுகாப்புக்கும் தேசிய நலனுக்கும் ஆபத்து நேரிட்டபோது இந்திய அரசு மென்மையாக நடந்துகொண்டதே இல்லை.
மிதமான இந்துத்துவாவும் மிதமான தேசியவாதமும் சுய அழிப்புக்கான அரசியல் தொடர்பிழப்புச் செயலாக முடிந்துவிடும். இந்தக் குறைகளை ராகுல் திருத்திக் கொள்ள வேண்டும். மோடியின் தவறுகளைப் பட்டியலிடுவது மட்டும் போதாது. அப்படிச் செய்தால் 2019 பொதுத் தேர்தலில் மீண்டும் ஆளும் வாய்ப்பை பாஜகவுக்கு காங்கிரஸ் தானாகவே அளித்ததாகிவிடும்.
சேகர் குப்தா,
‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்.
தமிழில்: ஜூரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT