Last Updated : 07 Sep, 2018 01:30 PM

 

Published : 07 Sep 2018 01:30 PM
Last Updated : 07 Sep 2018 01:30 PM

ஆந்திராவில் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற அவலம்; பாதிவழியில் குழந்தை பிறந்தது- அதிர்ச்சி வீடியோ

ஆந்திராவில் முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை பிறந்தது.

ஆந்திரபிரதேசத்தில், விசியாநகரம் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய கிராமத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவமனைக்குத் தன்னுடைய உறவினர்களுடன் செல்ல முடிவெடுத்தார் கர்ப்பிணிப் பெண். ஆனால் கிளம்புவதற்கு முன்னால் பிரசவ வலி எடுத்தது.

இதனால் மூங்கில் குச்சிகள், கயிறுகள் மற்றும் துணியைக் கொண்டு தொட்டில் உருவாக்கப்பட்டது. அந்த தொட்டிலில் அவரை ஏற்றி குடும்ப உறுப்பினர்கள் தூக்கிச் சென்றனர்.

வனப்பகுதிக்குள் சென்ற அவர்கள், சேறு நிறைந்த சாலையில் கூழாங்கற்களுக்கு நடுவில் நடந்தவாறே கர்ப்பிணிப் பெண்ணைத் தூக்கிச் சென்றனர். சுமார் 4 கி.மீ. தூரத்தைக் கடந்த பிறகு, பிரசவ வலி அதிகமானது. இதனால் தொட்டில் இறக்கப்பட்டது.

பிளேடால் அறுக்கப்பட்ட தொப்புள் கொடி

கர்ப்பிணிப் பெண் தரையில் இறக்கப்பட்டார். மூன்று பெண்கள் சுற்றி நின்றுகொண்டனர். நடுவழியிலேயே அவர்களின் உதவியோடு பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்தது. இரண்டு பெண்கள் குழந்தையின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்து எடுத்தனர்.

இதுகுறித்துப் பேசிய கிராமவாசிகள், ''மருத்துவ வசதிக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. இதுகுறித்துப் பலமுறை பேசியும் அதிகாரிகள் எந்தவித உதவியும் செய்யவில்லை'' என்று தெரிவித்தனர்.

முன்னதாக ஜூலை 29 அன்று இதே மாவட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லாமல், கர்ப்பிணிப் பெண் ஒருவர் 12 கி.மீ. கொண்டு செல்லப்பட்டு, பிரசவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x