Published : 15 Sep 2018 12:35 PM
Last Updated : 15 Sep 2018 12:35 PM
கேரள கன்னியாஸ்திரியை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்தததாக குற்றம் சாட்டப்பட்ட ஜலந்தர் பிஷப் பிராங்கோ மூலக்கல் பதவி விலகியுள்ளார்.
ஜலந்தர் தேவாலய நிர்வாகத்தைத் தொய்வின்றி நடத்த மூவர் கொண்ட குழு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேத்யூ கோகண்டம் என்பவர் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன?
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தேவாலய பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.
புகார் குறித்துக் கூறிய கன்னியாஸ்திரி, கடந்த 2014-ல் கேரளத்தின் குருவிளங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லம் அருகே உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் வைத்து தன்னிடம் முதல் முறை அத்துமீறியதாகவும், பயத்தின் காரணமாக வெளியே சொல்லாமல் இருந்ததை பிராங்கோ பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறினார். மேலும் அவர் 13 தடவை தன்னிடம் அத்துமீறிய இடம், நேரம் என அனைத்துத் தகவல்களையும் காவல்துறையிடம் விளக்கியுள்ளார்.
2014 முதல் 2016 வரை நடைபெற்ற இச்சம்பவம் குறித்து கன்னியாஸ்திரி கொடுத்த புகாரின் பேரில் பேராயர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தின்போது பிராங்கோ பாதிரியாராக இருந்துள்ளார்.
வாடிகனுக்குக் கடிதம்
கன்னியாஸ்திரியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்தியப் பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு கன்னியாஸ்திரி கடிதம் அனுப்பியிருந்தார்.
கன்னியாஸ்திரிகள் போராட்டம்
இதைத்தொடர்ந்து கன்னியாஸ்திரியின் புகார் வெளிச்சத்துக்கு வந்தது. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தங்கிய விடுதியில் இருந்த மற்ற கன்னியாஸ்திரிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பிஷப் பிராங்கோ பதவி விலகியுள்ளார். அவர் விரைவில் விசாரணைக்காக கேரளா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT