Last Updated : 01 Sep, 2018 12:32 PM

 

Published : 01 Sep 2018 12:32 PM
Last Updated : 01 Sep 2018 12:32 PM

சவுதி அரேபியாவில் உயிரிழந்த இந்தியப் பெண்ணின் மரணத்தில் சந்தேகம்

சவுதி அரேபியாவில் வீட்டுவேலை செய்து வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.

சவுதி அரேபியாவின் ரியாத்தில் ஏஜென்ட் மூலம் வேலைக்குச் சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷாஹீன், (41) தற்போது மர்மமான சூழ்நிலையில் இறந்துள்ளார். ஷாஹீனை வேலை செய்த வீட்டின் உரிமையாளர் கொன்றுவிட்டதாக பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதிச் சடங்கு செய்ய இறந்த பெண்ணின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அவரது மகள் பசீனா ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில், ‘‘என் தாயார் ஷாஹீன் ஒரு ஏஜென்ட்டை அணுகிய போது, அவர் சவுதி அரேபியால் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலை இருக்கிறது என்று கூறியுள்ளார். அவரது வார்த்தைகளை நம்பி 2016 டிசம்பர் 20 அன்று சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.

முதலில் துபாய் சென்று அதன்பிறகு சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு சென்றபின், ஒரு வீட்டில் வேலைக்கு சேர்த்து விடப்பட்டார்.  வீட்டைக் கவனித்துக்கொள்ளுதல், குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் வேலைகளை வழங்கினர். முதலில், மாதம் ரூ.20 ஆயிரம் என்று கூறப்பட்ட சம்பளம் தரப்படவில்லை. மாறாக, அவருக்கு மாதம் ரூ.16 ஆயிரம் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது.

கடந்த ஜூலை எனது தாயின் உடல் மோசமடைந்தது, அவர் தொலைபேசியில் என்னிடம் பேசினார், அப்போது தன்னை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க, முதலாளியிடம் வலியுறுத்தும்படி கேட்டுக்கொண்டார். நானும் அந்த வீட்டின் உரிமையாளரிடம் பேசினேன். அவரும் உறுதியளித்தார். ஆனால் பின்னர் அவர் என் தாயாரை தொடர்ந்து மிரட்டி துன்புறுத்தி வந்துள்ளார்.

பின்னர் ஆகஸ்ட் 31 -ம் தேதி அன்று எங்கள் தாயார் இறந்துவிட்டதாக அவர் பணியாற்றிய வீட்டின் உரிமையாளரிடம் இருந்து ஒரு போன் வந்தது. எப்படி இறந்தார் என்ற காரணத்தை அவர் சொல்லவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இறுதிச் சடங்கு செய்ய எங்கள் தாயார் உடலை இந்தியாவுக்கு அனுப்பமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரிக்கை வைத்துள்ளோம்’’ என பசீனா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x