Published : 19 Sep 2018 01:14 PM
Last Updated : 19 Sep 2018 01:14 PM
ஓமனில் வசிக்கும் கணவர் வாட்ஸ் அப் மூலம் தன்னிடம் 'முத்தலாக்' கூறியதாக ஹைதராபாத்தில் வசிக்கும் 29 வயது முஸ்லிம் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 29, அவரைத் திருமணம் செய்துகொண்டவருக்கு வயது 62. இவர்களது திருமணம் கடந்த 2017-ல் நடைபெற்றது. பின்னர் கணவர் ஓமனுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஏஎன்ஐயிடம் தெரிவித்ததாவது:
திருமணத்திற்குப் பின்னர் கணவர் வசிக்கும் ஓமன் நாட்டுக்கு நானும் சென்றேன். அதன் பிறகு அவருடன் வசிக்கத் தொடங்கினேன். அவரோ சில நாட்களிலேயே என்னைத் துன்புறுத்த ஆரம்பித்துவிட்டார். ஆனால் நான் சூழ்நிலையைக் கருதி தொடர்ந்து அவருடன் தொடர்ந்து வாழ்ந்து வந்தேன். எங்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை ஆரோக்கியமாக இல்லாத காரணத்தால் சில நாட்களிலேயே இறந்துவிட்டது. ஒருநாள் என் கணவர், ''குழந்தை இறந்துவிட்டது. அதனால் உன்னை விட்டு விலகிவிட விரும்புகிறேன்'' என்றார்.
பின்னர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி ஹைதராபாத்துக்கு என் தாய்வீட்டுக்கு அவர் என்னை அனுப்பிவைத்தார். நான் இங்கு வந்த பிறகு, இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 அன்று வாட்ஸ் அப்பிலேயே 'முத்தலாக்' அனுப்பினார். நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவரிடமிருந்து பதில் வரவில்லை.
எனக்கு நேர்ந்துள்ள இந்த அவலத்திற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நாடியுள்ளேன். சுஷ்மா மேடம் தான் இவ்விஷத்தியல் தலையிட்டு எனக்கு நீதி பெற்றுத் தரவேண்டும்.
இந்த வகையான மனிதர்கள் ஏழைப் பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறவர்களாக இருக்கிறார்கள், முதலில் அவர்கள் திருமணம் செய்துகொள்கின்றனர், பின்னர் தலாக்கைக் கொடுக்கிறார்கள், வாட்ஸ் அப்பில் தெரிவித்துள்ள முத்தலாக்கை ஒரு ஆதாரமாக வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்,"
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து நடைமுறையாக உள்ள 'முத்தலாக்' முறை சட்ட அங்கீகாரமற்றது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட்மாதம் 22-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT