Published : 16 Sep 2018 09:46 AM
Last Updated : 16 Sep 2018 09:46 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். இரவு முத்துப்பல்லக்கு சேவை சிறப்பாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன் 3-ம் நாளான நேற்று காலை, உற்சவ மூர்த்தியான மலையப்பர், யோக முத்திரையில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். இந்த யோக மூர்த்தியை காண 4 மாட வீதிகளிலும் பக்தர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். காளை, குதிரை, யானை போன்ற பரிவட்டங்களுடன் வாகன சேவை கோலாகலமாக நடைபெற்றது. மாட வீதிகளில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநில நடனக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.
இதைத் தொடர்ந்து மாலையில் சிறப்பு திருமஞ்சன சேவையும் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இரவு, முத்துப்பல் லக்கில் மலையப்பர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித் தார். இதில் மாட வீதிகளில் திரண் டிருந்த பக்தர்கள் ஆரத்தி எடுத்து மலையப்பரை வழிபட்டனர். இன்று 4-ம் நாள் பிரம்மோற்சவ விழாவில் காலை கற்பகவிருட்ச வாகன சேவை, இரவு சர்வ பூபால வாகன சேவை நடைபெற உள்ளது.
நாளை கருட சேவை
பிரசித்தி பெற்ற கருட சேவை நாளை இரவு நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரம்மோற்சவ விழாவிலும் 5-ம் நாள் இரவு கருட சேவை நடைபெறுகிறது.
4,500 போலீஸ் பாதுகாப்பு
சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இதனால் நாளை 4,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் விடிய விடிய பஸ் போக்குவரத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் கருட சேவை நள்ளிரவு 12 மணி வரை 5 மணி நேரம் நடைபெற உள் ளது.
இதையொட்டி 4 மாட வீதிகளிலும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது. பக்தர்களுக்கு இலவச உணவு, குடிநீர், மோர் போன்றவை வழங்கப்பட உள்ளன. நாளை நண்பகல் 12 மணி முதலே பக்தர்கள் மாட வீதிகளில் அனுமதிக்கப்பட உள்ளனர். சிறப்பு அனுமதி பாஸ் பெற்ற பக்தர்கள், விஐபி.க்கள், தேவஸ்தான ஊழியர்கள் என தனித்தனி வரிசை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பைக்குகளுக்கு தடை
கருட சேவையை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை திருப்பதி மலைப்பாதையில் மோட்டார் பைக்குகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பைக்குகளில் வரும் பக்தர்கள், அலிபிரி மலையடிவாரத்திலேயே பைக்குகளை நிறுத்திவிட்டு, பஸ்களில் திருமலைக்குச் செல்ல வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT