Published : 09 Sep 2018 07:58 AM
Last Updated : 09 Sep 2018 07:58 AM

ஹைதராபாத்தில் 10 முகங்களுடன் 57 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் கைரதாபாத் பகுதியில் 10 முகங்கள் கொண்ட 57 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக, ஹைதராபாத்தில் அதிக அளவில் சிலைகள் வைக்கப்பட்டு சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும், விதவிதமான விநாயகர் சிலைகளை வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாதவாறு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பண்டிகையின் இறுதியாக, விநாயகர் சிலைகளை கரைக்க ஹுசைன் சாகர் உட்பட பல ஏரிகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத் விழாக் குழுவினர் அமைக்கும் வித்தியாசமான விநாயகர் சிலையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் முதற்கொண்டு சினிமா, அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் இந்த விநாயகர் சிலையை தரிசிக்க வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் விதவிதமான அலங்காரத்தில் விநாயகர் சிலை அமைக்கப்படும். இந்த ஆண்டு ‘தசா முக’ வடிவில், அதாவது 10 முகங்களோடு சிலை அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 150 கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகி வரும் இந்த விநாயகர் சிலைக்கு, தற்போது இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது. இது வரும் 11-ம் தேதியே திறப்பு விழா காணும் வகையில் இரவும் பகலுமாக கைவினை கலைஞர்கள் பாடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விநாயகர் சிலையின் கையில் ராட்சத வடிவிலான லட்டு பிரசாதமும் வைக்கப்பட உள்ளது. 11 நாட்கள் கழித்து இந்த லட்டு ஏலம் விடப்படும். இதை லட்சக் கணக்கில் ஏலம் எடுக்கவும் பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x