Last Updated : 27 Sep, 2014 10:04 AM

 

Published : 27 Sep 2014 10:04 AM
Last Updated : 27 Sep 2014 10:04 AM

வெள்ளை மாளிகை வாசலில் படம் எடுக்க நின்ற மோடிக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிவப்பு கம்பள வரவேற்பு

சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் மாளிகை யின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட நரேந்திர மோடி, இப்போது சிவப்பு கம்பள வரவேற்புடன் வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

அமெரிக்க அரசு சார்பில் ‘அமெரிக்கன் கவுன்சில் பார் யூத் பொலிடிக்கல் லீடர்ஸ் (ஏ.சி.ஒய்.பி.எல்)’ எனும் பெயரில் ஓர் அமைப்பு நடத்தப்படுகிறது. இதன் சார்பில் அமெரிக்காவை புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் முக்கிய அரசியல் கட்சிகளை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்துக்கு இந்தியாவில் இருந்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. இதை ஏற்று இரு கட்சிகளும் மாநில கட்சித் தலைவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

கடந்த 1994-ல் நடந்த கூட்டத்துக்கு பாஜக சார்பில் குஜராத் மாநில பாஜக அமைப்புச் செயலாளராக இருந்த மோடி, ஆந்திர மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்த ஜி.கிஷண் ரெட்டி, கர்நாடகா மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்த அனந்தகுமார் ஆகியோர் அமெரிக்காவுக்கு சென்றனர்.

அந்த சமயத்தில் மூவரும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வாசல் முன்பு நின்று எடுத்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தி இந்துவிடம் மோடியுடன் படத்தில் இருக்கும் ஜி.கிஷண் ரெட்டி கூறியதாவது:

‘அந்தப் படம் எடுக்கும்போது எங்களுடன் இருந்த மோடி நம் நாட்டின் பிரதமராவார் எனவும் அதே மாளிகையின் சிறப்பு விருந்தினராக செல்வார் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை. எனினும் அப்போதே அந்த நாட்டை நம் நாட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பதில் மோடி அதிக ஆர்வம் காட்டினார். அங்கிருந்த லிபர்டி சிலை உட்பட பல விஷயங்களை பார்த்து அது நம் நாட்டில் செய்யப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்க அதிகாரிகளிடம் அந்நாட்டு அரசின் நிர்வாகங்கள் பற்றி பல்வேறு கேள்விகளை மோடி எழுப்பினார்.

அரசு கூட்டங்களைவிட அங்கிருந்த குஜராத் மக்கள் நடத்திய கூட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ள வேண்டி இருந்தது. எங்களையும் அழைத்து சென்று அந்த கூட்டங்களில் மோடி பேசியதை நினைத்தால் இப்போது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

தற்போது தெலங்கானா மாநில பாஜகவின் தலைவராக இருக்கும் கிஷண் ரெட்டி, அந்த மாநில அம்பர்பேட் தொகுதி சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார்.

சிறியவகை பழைய கேமராவில் எடுத்த இருபது படங்கள் அவரிடம் இருந்துள்ளன. இப்போது மோடி அமெரிக்காவுக்கு செல்வதை ஒட்டி அதை எடுத்து பார்த்தபோது படங்கள் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதில் இரண்டை மட்டும் பத்திரமாக எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார் ரெட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x