Published : 17 Sep 2018 09:26 AM
Last Updated : 17 Sep 2018 09:26 AM
டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, சீல் வைத்த வீட்டின் பூட்டை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லியில் உள்ள கோகல்பூர் பகுதியில் மனோஜ் திவாரி சீல் வைத்த வீட்டின் பூட்டை உடைக்கும் வீடியோ காட்சியால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இது குறித்து மனோஜ் திவாரி கூறும்போது, “காங்கிரஸ், அரவிந்த் கேஜ்ரிவால் இருவரும் சட்டவிரோதங்களை சட்டப்பூர்வமாக்குகின்றனர். சீல் விவகாரத்தில் மக்களை திசை திருப்புகின்றனர். அனுமதி பெறாத காலனியில் ஒரு வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. 1000 வீட்டுகள் அங்கு இருக்கும் போது ஏன் ஒரு விட்டுக்கு மட்டும் சீல்? ஏன் இந்த தெரிவு? அதனால்தான் நான் அதை எதிர்க்க சீலை உடைத்தேன்” என்று கூறியுள்ளார்.
டெல்லியில் முறையான அனுமதி பெறாமல் கட்டிடங்களும் வீடுகளும் கட்டப்பட்டு வருவதாகவும், முறையான அனுமதி பெறாமல் வீட்டிலேயே தொழில் செய்வதாகவும் புகார்கள் எழுந்ததையடுத்து உச்ச நீதிமன்றம் கடும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தது, இதனையடுத்து உச்ச நீதிமன்றம் மீண்டும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனை எச்சரித்து நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் கோர்ட் அவமதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தது. இதனையடுத்து அங்கு அனுமதி பெறாத கட்டிடங்கள், வீடுகளுக்கு சீல் வைக்கும் நடவடிகை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
ஏன் தேர்ந்தெடுத்து சீல் வைக்க வேண்டும்? இந்த விவகாரத்தில் பாஜக ஆளும் முனிசிபாலிட்டியாக இருந்தாலும் சரி உச்ச நீதிமன்றம் செல்லாமல் நான் இருக்க மாட்டேன், என்கிறார் மனோஜ் திவாரி.
ஆனால் இந்த பாஜக ஆளும் முனிசிபல் கார்ப்பரேஷன் தான் வீட்டைச் சீல் வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காங்கிரஸும் ஆம் ஆத்மியும் சாடிஉள்ளன.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறும்போது, “காலையில் சீல் வைக்கின்றனர், மாலையில் சீலை இவர்களே உடைக்கின்றனர்., மக்கள் என்ன முட்டாள்களா? இது கூட அவர்களுக்குப் புரியாதா என்ன?” என்று சாடிஉள்ளார்.
வீட்டில் தொழில் நடத்தும் சிறு தொழிலுக்கு எதிராக இந்த சீல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டும் டெல்லி காங்கிரஸ் இதற்கு எதிராக ‘நியாய் யூத்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வருகிறது.
ஆனால் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சீல் வைத்த வீட்டை உடைத்ததன் மூலம் பாஜக தலைவர் மனோஜ் திவாரி நாடகம் நடத்துகிறார் என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
வீட்டுத் தொழிலுக்கு எதிராக இந்த சீல் வைக்கும் நடவடிக்கைகளை பாஜக கைவிட வேண்டும் இல்லையேல் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT