Published : 29 Sep 2018 08:51 AM
Last Updated : 29 Sep 2018 08:51 AM
ஆந்திராவில் நக்சல் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கிட்டாரி சர்வேஸ்வர ராவ் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் அரக்கு தொகுதியின் தெலுங்கு தேசம் சட்டமன்ற உறுப்பினர் கிட்டாரி சர்வேஸ்வர ராவ். இவரையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமாவையும் கடந்த 23-ம் தேதி நக்சல்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த எம்எல்ஏ கிட்டாரி சர்வேஸ்வர ராவின் குடும்பத்தாரை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இது மிகவும் வருந்தத்தக்க சம்பவமாகும். கிட்டாரி சர்வேஸ்வர ராவின் குடும்பத்தாருக்கு ஆந்திர அரசு சார்பில் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும். மேலும், அவரது வீட்டில் உள்ள 4 பேருக்கும் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவியும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்படும். அவரது இளைய மகனுக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இதுதவிர, அவரது குடும்பத்தாருக்கு விசாகப்பட்டினத்தில் இலவச வீட்டுமனை வழங்குவதோடு, வீடு கட்டவும் நிதி உதவி அளிக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
இதேபோல், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏவான சிவேரி சோமாவின் வீட்டுக்கும் சென்று சந்திரபாபு நாயுடு ஆறுதல் கூறினார். மேலும், அவரது குடும்பத்தில் உள்ள மொத்தம் 7 பேருக்கு தலா ரூ. 10 லட்சம் அரசு சார்பிலும், ரூ. 5 லட்சம் கட்சி மூலமாகவும் நிதி உதவி செய்வதாக சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மேலும், சிவேரி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT