Published : 01 Sep 2018 08:06 AM
Last Updated : 01 Sep 2018 08:06 AM

திருப்பதியில் 370 படுக்கை வசதி கொண்ட  டாடா புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கல்: முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு

திருப்பதியில் அமையவுள்ள டாடா புற்றுநோய் மருத்துவமனைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.

திருப்பதி அலிபிரி பைபாஸ் சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய 25 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில், டாடா அறக்கட்டளை சார்பில் ‘ வெங்கடேஸ்வரா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மருத்துவமனைக்கான அடிக் கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர் ரத்தன்.என். டாடா ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் ரத்தன் டாடா பேசியதாவது:

இந்தியாவில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு, புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதற்காக திருப்பதியில் டாடா அறக்கட்டளை சார்பில் மருத்துவமனை தொடங்கப்படவுள்ளது. முதலில் 100 படுக்கைகளும், அதன் பின்னர் 370 படுக்கைகளும் கொண்ட நவீன மருத்துவமனையாக இது அமைக்கப்படும். இதற்கு இலவசமாக 25 ஏக்கர் நிலம் வழங்கிய திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், இந்த மருத்துவமனை அமைய பெரும் ஒத்துழைப்பு அளித்து வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ரத்தன் டாடா பேசினார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ரத்தன் டாடா இந்த நாட்டிலேயே மிகவும் மனிதாபிமானவர் என்பது என்னுடைய கருத்து. வாழ்க்கையில் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்து, மக்களின் நலனுக்காக தற்போது அக்கறை எடுத்து வருகிறார். டாடா அறக்கட்டளையினர், அரசுகள் செய்யும் நல திட்டங்களை விட இன்னமும் அதிகமாக செயல்படுத்தி வருகின்றனர். திருப்பதியில் தற்போது அமைய உள்ள டாடா புற்றுநோய் மருத்துவமனை, சுமார் ரூ.600 கோடியில் கட்டப்படவுள்ளது என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x