Last Updated : 25 Sep, 2014 09:40 AM

 

Published : 25 Sep 2014 09:40 AM
Last Updated : 25 Sep 2014 09:40 AM

2ஜி முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் 2ஜி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இரண்டாம் முறையாக மறுத்துள்ளது.

2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய கனிமொழி, ஷாஹித் உஸ்மான் பல்வா, ரவி ரூயா உள்ளிட்டோர், இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எச்.எல்.தத்து, எஸ்.ஏ.பாப்தே அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராம் ஜெத்மலானி, ஹரிஷ் சால்வே ஆகியோர் ஆஜராயினர். சிபிஐ தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மற்றும் சிபிஐ இயக்குநர் சார்பில் விகாஸ் சிங் ஆகியோர் ஆஜராயினர்.

இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக புதிதாக நியமிக் கப்பட்டுள்ள ஆனந்த் குரோவர், “இந்த வழக்கு தொடர்பாக என்னிடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் தரப்பட்டுள்ளன. குறுகிய கால கட்டத்தில் அவற்றை படித்துப் பார்க்க முடியாது.

எனவே, வழக்கை இப் போதைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. வாதிடுவதற்கு இப்போது நான் தயாராக இல்லை. எனக்கு அவகாசம் அளிக்க வேண்டும”’ என்று கேட்டார்.

ஒத்திவைப்பு

இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அப்போது ராம்ஜெத்மலானி, “சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் 2ஜி வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. அதில் தீர்ப்பளிக்கப்பட்டால், இம்மனு தொடர்ந்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே, இம்மனு மீது முடிவு தெரியும் வரை 2ஜி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதிகள், “இதற்கு முன்பு நாங்கள் எப்படி தடை விதிக்கவில்லையோ, அதே நிலை தான் இன்றும் தொடரும். இன்று புதிதாக எந்த முடிவும் எடுக்க முடியாது” என்று கூறி நிராகரித்தார்.

2ஜி வழக்கு விசாரணைக்கு தடை கோரி முன்பு தொடரப்பட்ட வழக்கும் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x