Published : 06 Sep 2018 02:18 PM
Last Updated : 06 Sep 2018 02:18 PM
பணமதிப்பு நீக்கம் ஒரு பேரழிவைப் போன்று எல்லோரையும் ஆட்டிப்படைத்துவிட்டதாகவும் 2000 ரூபாய் நோட்டுக்களை ஒழியுங்கள் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர தலைநகர் அமராவாதியில் நேற்று தெலுங்குதேச கட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
‘‘பணமதிப்பு நீக்கம் ஒரு பேரழிவைப் போன்று எல்லோரையும் ஆட்டிப்படைத்துவிட்டது. காகித நோட்டுக்களைவிட டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு அதிக செலவாகிறது; அதேவேளை அரசாங்கம் இதை சரியாக நடைமுறைப் படுத்தவில்லை. எனவே 2000 ரூபாய் நோட்டுக்களை ஒழியுங்கள். அது தேவையில்லை.
மத்திய அரசைப் பொறுத்தவரை, ஆந்திர தலைவர் அமராவதி நகரத்தின் வளர்ச்சிப்பணிகளுக்கு நிதிஉதவி தரவில்லை; தடைகளைத்தான் உருவாக்குகிறார்கள்.
அமராவதி நகர நிர்மாணப் பணிகள் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. உயர் நீதிமன்றத்திற்கான கட்டிடங்கள் டிசம்பர் இறுதிக்குள் தயாராகிவிடும்.
அமராவதி பத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மத்திய அரசு நிதி வழங்கவில்லை. நமது சொந்த முயற்சியிலேயே இதற்கான பணத்தை திரட்டிவருகிறோம். ஆனால் மத்திய அரசு நம்மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கூறிவருகிறது.
மத்திய அரசு ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து தருவதிலோ அல்லது நிதி ஒதுக்குவதிலோ எந்தவிதமான ஒத்துழைப்பையும் அளிக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நமது எம்பிக்கள் இதற்காக நன்றாகவே குரல் கொடுத்தனர்.
மத்திய அரசோடு இதற்காக நாம் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறோம். நமது ஒவ்வொரு முயற்சியையும் மத்திய அரசு தடுத்து வருகிறது. அவர்களால் நமக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.
கிருஷ்ணா கோதாவரி இணைப்பு
நாம் நிறைய திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். விவசாயத்திற்காக 10 லட்சம் பண்ணைக் குளங்களை அமைத்துள்ளோம். கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைத்துள்ளோம்.
மேலும், கிருஷ்ணா நதி விவசாய பகுதிகளில் கூடுதலான நீர் தேவைக்காக கோதாவரி நீரைக் கொண்டுவர பட்டீசீமா திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது போலாவரம் திட்டம் நடைபெற்று வருகிறது.
ஆந்திராவுக்கான உயிர்நாடி வேலைகள் துரித கதியில் இயங்கி வருகின்றன. ஆனால் மத்திய அரசு போதுமான ஒத்துழைப்பு தரவில்லை. நமது மாநிலத்தில் இதுவரை 10 நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவடைந்துள்ளன, 10-16 திட்டங்களின் வேலைகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன.
நம் மாநிலத்தில் குறைவான மழைபெய்திருந்தாலும் குளங்கள், ஏரிகளில் நீரைத் தேக்கிக் கொள்ள இதுதான் சரியான நேரம். இந்த நேரத்தில் நமது நோக்கமெல்லாம் விவசாயம், தோட்டக்கலை. மீன்வளர்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதில்தான் இருக்க வேண்டும்.
இவ்வாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
சந்திரபாபு நாயுடு, ஆந்திர இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்களை அக்டோபரில் 2ல் தொடங்கஉள்ளார்.
எல்லா சமூக மக்களையும் நலமாக வைத்துக் கொள்வதில் கட்சித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று அறிவுறுத்தினார். அதேபோல அனைத்து சமுதாயங்களும் தனது ஆட்சியின் நல்லவிதமாக வாழவேண்டும் என்பதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT