Published : 11 Sep 2018 11:32 AM
Last Updated : 11 Sep 2018 11:32 AM

ஓராண்டில் 160 கைதுகள்: உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாகிறதா தேசியப் பாதுகாப்புச் சட்டம்?

உ.பி.யில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவோம் என்ற சூளுரையில் கடந்த மார்ச் மாதம் உ.பி. ஆட்சியைப் பிடித்தது பாஜக. முதல்வர் ஆதித்யநாத் தன் ஆட்சியில் மதவாதச் சண்டைகள், தகராறுகள் ஒன்று கூட நிகழவில்லை என்று தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறார்.

ஆனால் யோகி ஆதித்யநாத் இவ்வாறு சுய பாராட்டு வழங்கிக் கொண்ட 10 நாட்களில் மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த புள்ளிவிவரங்களில் வகுப்புவாத மோதல்கள் பட்டியலில் உ.பி. முதலிடம் வகித்தது தெரியவந்தது. 2017-ல் மட்டும் ஏற்பட்ட வன்முறைகளில் 44 பேர் கொல்லப்பட்டு சுமார் 540 பேர் காயமடைந்ததாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புலந்த்சாஹர், சஹரன்பூர் வகுப்புவாத மோதல்களில் ஆதித்யநாத் தலைமையிலான இந்து யுவ வாஹினி அமைப்பும் உள்ளூர் பாஜக தொண்டர்களும் ஈடுபட்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இவர்களுக்கு வெறும் எச்சரிக்கை மட்டும்தான், சட்ட ரீதியான நடவடிக்கைகள் இல்லை.

இந்நிலையில் ஜனவரி 16, 2018-ல் யோகி ஆதித்யநாத் கூறும்போது, சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வர 160 பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது என்றார். இதோடு கடந்த 12 மாதங்களில் 1200 போலீஸ் என்கவுன்ட்டர்கள் நடந்ததுதான் யோகி ஆதித்யநாத் அரசின் ‘சாதனை’.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்பது ஜனநாயகத்துக்குள் இருக்கும் ஒரு பாஸிச சட்டமாகும், இதில் கைது செய்யப்பட்டால் வக்கீல் கிடையாது, முறையீடு கிடையாது, வாதமும் கிடையாது கேள்வியும் கிடையாது கேட்பாரும் கிடையாது. உண்மையில் 1980-ல் இந்தச் சட்டம் கொண்டு வரப்படும் போது வெறும் தடுப்புக்காவல் சட்டமாகத்தான் இருந்தது. சமூக ஒழுங்கையும் மக்கள் அமைதி சில சமூக விரோத சக்திகளினால் பாதிக்கப்படகூடாது என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் இன்று ஆட்சியாளர்களின் பழிவாங்கும் கொடூர ஆயுதமாகியுள்ளது என்பதே உண்மை. இதில் அதிகபட்சம் 12 மாதங்கள் ஒருவரை உள்ளே வைக்க முடியும். மேலும் ஏன் எதற்கு என்ற காரணம் சொல்லாமல் யாரை வேண்டுமானாலும் 10 நாட்களுக்கு பிடித்து உள்ளே வைக்கவும் இந்த தேசியப் பாதுகாபுச் சட்டம் வழிவகுக்கும்.

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 15 பேரின் குடும்பத்தினரைச் சந்தித்து பேட்டி கண்டது. வகுப்புவாத மோதல்களுக்குப் பிறகே இந்தக் கைதுகள் நடந்துள்ளன. இந்த மோதல்களில் இந்து யுவவாஹினி, இந்து சமாஜ் கட்சி, அகிலபாரத இந்து மகாசபை, ஆகியவற்றின் பங்களிப்பும் அதிகமே, ஆனால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருப்பது முஸ்லிம்கள் மீது மட்டுமே. முதலில் கைது செய்யப்பட்டனர், பிறகு இவர்களுக்கு செஷன்ஸ் கோர்ட் ஜாமீன் அளித்தது, ஆனால் போலீஸார் மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் பிடித்து உள்ளே வைத்தனர். 2014 தேர்தல்களுக்கு முன்பு சிறுசிறு மதக் கலவரங்களைத் தூண்டி வாக்காளர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதுகள் செய்து வாக்கு வங்கி அரசியல் செய்தது போல் 2019 தேர்தல் நெருங்கும் சமயத்திலும் இவ்வாறு கலவரங்கள் தூண்டப்படுகின்றன என்று பலரும் சந்தேகிக்கிறார்கள்.

யோகி ஆதித்யநாத்தும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக இடக்கரடக்கலாகவே பேசி வருகிறார், “சாலையில் நமாஸ் செய்வதைத் தடுக்காத நான் காவல் நிலையத்தில் ஜன்மாஷ்டமியையும் தடுக்க முடியாது” என்று பேசினார். சட்டம் ஒழுங்கைப் பராமரித்தலில் மத உணர்வுகளைப் புகுத்தும் யோகி ஆதித்யநாத் கலவரங்கள் தூண்டப்படும் மதக் கொண்டாட்டங்களைச் சட்டத்துக்கு அப்பாலானதாகக் கருதுகிறார்.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி மொகரம் பண்டிகையும் இந்துக்களின் சடங்கான துர்கா சிலைகளை நீரில் கரைப்பதுமான தினமும் ஒன்று சேர்ந்தது. இதனையடுத்த் உ.பி.யில் 9 மாவட்டங்களில் கலவரப் பதற்றங்களும் சிறு சிறு கலவரங்களும் மூண்டன. முஸ்லிம்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 2015-ல் மோடி தலைமை பாஜக அரசு நாட்டின் மத அடிப்படையிலான மக்கள் தொகைக்கான 2011 கணக்கெடுப்பை வெளியிட்டது. இதன் மூலம் கடுமையான முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரங்களை இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்டன, அதாவாது இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது, முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கிறது என்பதே அந்தப் பிரச்சாரம். இதனையடுத்துதான் கர்வாப்ஸி போன்றவை உச்சம் பெற்றன.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுவது என்னவெனில், யோகி ஆதித்யநாத் அரசு முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று கூறுகின்றனர், “மனுவாதப் போக்காக உள்ளது, அதாவது ஆர்.எஸ்.எஸ்., இந்து தேசியவாதக் கட்சிகள் முஸ்லிம்களையும் தலித்துகளையும் இந்து ராஷ்ட்ரா திட்டத்தின் ஓர் அங்கமாகக் கருதவில்லை. 2019 தேர்தல்களுக்கு முன்னால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை இவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது தேசப் பாதுகாப்புக்கு இவர்கள் அச்சுறுத்தல் என்று காட்டி, மதரீதியாக வாக்குகளை குவிக்கவே இந்த உத்தி” என்று ராஜீவ் யாதவ் என்ற சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x