Published : 09 Sep 2018 12:41 PM
Last Updated : 09 Sep 2018 12:41 PM
உச்ச நீதிமன்றமே எங்களுடையதாக இருக்கும்போது, அயோத்தியில் ராமர் கோயில் உறுதியாகக் கட்டுவோம் என்று உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் முக்த் பிஹாரி வர்மா சர்ச்சைக் குரிய வகையில் பேசியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இன்னும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்காததால், ராமர் கோயில் நிலம் தொடர்பாக எந்த அரசியல் தலைவர்களும் கருத்துத் தெரிவிப்பது இல்லை.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் முக்த் பிஹாரி வர்மா ராமர் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
பஹாரெய்ச் நகரில் அமைச்சர் முக்த் பிஹாரி வர்மா நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அயோத்தியில் அனைத்துப் பிரச்சினைகளையும் நாங்கள் தீர்த்து, விரைவில் அங்கு ராமர் கோயிலைக் கட்டுவோம். உச்ச நீதிமன்றமே எங்களுடையதுதான், ஆதலால், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவோம். நீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோயில் அனைத்தும் எங்களுடையதுதான்.
வளர்ச்சியை முன்னிறுத்தி பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது, அதேசமயம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் பாஜக தீர்மானமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாஜக அமைச்சர் முக்த் பிஹாரி வர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி கண்டனங்கள் வலுக்கத்தொடங்கின. உடனடியாக தனது பேச்சுக்கு விளக்கம் அளித்து அமைச்சர் பிஹாரி வர்மா மீண்டும் பேட்டி அளித்தார், அதில், நான் உச்ச நீதிமன்றம் நம்முடையது என்று கூறியதன் அர்த்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாமெல்லாம் இந்த நாட்டின் குடிமக்கள், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்ற அர்த்தத்தில் தெரிவித்தேன். நான் ஒருபோதும் நீதிமன்றம் எங்களுடைய அரசாங்கத்துக்குச் சார்பானது என்று தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, மத்திய அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வரும். அனைத்து வாய்ப்புகளும், கதவுகளும் மூடப்பட்ட நிலையில், மாநிலங்கள் அளவையில் போதுமான உறுப்பினர்கள் வந்தவுடன் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.
கேசவ் பிரசாத் மவுரியாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT