Published : 08 Sep 2018 05:14 PM
Last Updated : 08 Sep 2018 05:14 PM
காஷ்மீர் மாநிலத்தில் கதுவா அருகே இயங்கிவரும் தனியார் விடுதியில் முறைகேடாக அடைக்கப்பட்டிருந்த 20 குழந்தைகள் இன்று மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
காஷ்மீரின் கதுவாவிலிருந்து பால் ஆசிரமம் செல்லும் சாலையில் நாரி நிகேதன் அருகில் இயங்கிவரும் ஒரு தனியார் விடுதியில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தனிப்படைகளுடன் அங்கு விரைந்த போலீஸார் விடுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 8 முதல் 12 வயது வரை உள்ள 20 குழந்தைகளை மீட்டனர்.
குழந்தைகளை முறைகேடாக தங்க வைத்து அவர்களை தவறாக பயன்படுத்தியதாக, விடுதியின் உரிமையாளரும் உடனே கைது செய்யப்பட்டார். குழந்தைகள் தற்போது மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மருத்துவ அறிக்கைகள் வந்தபிறகுதான் அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனரா? என்ற விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய காவல் துணை ஆணையர் ரோஹித் கஜூரியா தெரிவிக்கையில், ‘‘நேற்று மதியம் மூன்று மணியளவில் கதுவா அருகே விடுதியில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு தவறான செயல்கள் நடைபெறுவதாக தகவல் அறிந்தோம்.
பின்னர் இப்பிரச்சினையின் மொத்த கோணங்களையும் ஆராய்ந்த பிறகு இரு வட்டாட்சியர்கள், லேபர் ஆபீசர், காவலர்கள் ஆகியோர்கள் அடங்கிய இரு தனிப்படைகளை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பி வைத்தோம். சில குழந்தைகளை அழைத்துப் பேசிய பிறகு நமது குழுக்கள் அவ்விடுதியில் சோதனையிட்டனர்.
அதன் பின்னர் அனைத்துக் குழந்தைகளையும் அங்கிருந்து மீட்டு விடுதி உரிமையாளரையும் கைது செய்தோம்.
இவ்விடுதியின் பதிவு குறித்து கேள்வி எழுப்பியதற்கு, பதான்கோட் தேவாலயத்தோடு இணைந்து செயல்படும் ஒரு விடுதி என்று அந்நபர் தெரிவித்தார். பிறகு பதான்கோட் தேவாலயத்தை அணுகிக் கேட்டபோது, அப்படி எந்த விடுதியோடும் நாங்கள் ஒப்பந்தம் போடவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.''
இவ்வாறு காவல் துணை ஆணையர் தெரிவித்தார்.
தற்போது விடுதிக்குச் சொந்தக்காரர் போலீஸ் காவலில் உள்ளார். அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழந்தைகள் யார், எங்கிருந்து கடத்திவரப்பட்டவர்கள் போன்ற விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT