Published : 18 Jun 2019 12:00 AM
Last Updated : 18 Jun 2019 12:00 AM
முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதற்காக மனைவியை முஸ்லிமாக மதம் மாற்றிய கணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை பதிவு செய்யாமல் ஜார்க்கண்ட் மாநில போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் ஹாஜாரிபாகின் காவல் நிலையப் பகுதியில் நடைபெற்றுள்ளது. இப்பகுதியில் வாழும் இளைஞரான ரம்ஜான் அன்சாரி, லாரி ஓட்டுநராக உள்ளார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் உத்தரபிரதேச மாநிலம் ஆசம்கருக்கு பணி நிமித்தம் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்நகரைச் சேர்ந்த மனிஷா யாதவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதில் தன்னை ஒரு இந்துவாக அறிமுகப்படுத்தி, அகிலேஷ் யாதவ் எனப் பெயரை மாற்றிக் கூறியுள்ளார்.
இத்துடன் உ.பி.யின் ஜான்சி கோயிலில் மனிஷாவை ஐந்து வருடங்களுக்கு முன் இந்துமத முறைப்படியும் மணமுடித்துள்ளார். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மேலும் மணிஷா தற்போது கர்ப்பிணியாகவும் உள்ளார். இந்நிலையில் தனது கணவர் இந்து அல்ல, ரம்ஜான் அன்சாரி என்ற முஸ்லிம் என்பது மனிஷாவுக்கு தெரிந்துள்ளது. மனிஷாவிற்கு முன்பாக அவர் வேறு ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடித்திருப்பதும் தெரியவந்தது.
இதனால், அடிக்கடி இருவருக்கும் ஏற்பட்ட தகராறால், மனிஷாவை விவாகரத்து செய்ய விரும்பியுள்ளார் ரம்ஜான். இதற்காக அவர், தன் மனைவியை ஏமாற்றி சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் மதத்திற்கு மாற்றி உள்ளார். பிறகு முஸ்லிம்களால் விவாகரத்து செய்ய கூறப்பட்டு வந்த ‘தலாக்’ வார்த்தையை ஒரே சமயத்தில் மூன்றுமுறை கூறி மனிஷாவை விவாகரத்து செய்ததாகக் கூறி விட்டார்.
போலீஸில் புகார்வீட்டை விட்டும் மனிஷா துரத்தப்பட்டதால் அவர் ராஞ்சியில் ஒரு தனியார் விடுதியில் குழந்தையுடன் தங்கியபடி போலீஸில் புகார் செய்துள்ளார். இதில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட முத்தலாக் முறையை பயன்படுத்தி தம்மை விவாகரத்து செய்ததாக ரம்ஜான் மீது புகார் அளித்துள்ளார். தன் புகார் மீது வழக்குப் பதிவு செய்யாமல் நடவடிக்கை எடுக்கும்படி மனிஷா போலீஸாரிடம் கோரியுள்ளார்.
இதனால், வழக்குப் பதிவு செய்யாமல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏனெனில், பதிவு செய்யப்பட்ட வழக்கின்படி ரம்ஜான் கைது செய்யப்பட்டால் ஜாமீனில் வரமுடியாதவகையில் சிறையில் தள்ளப்பட்டு விடுவார் என்பது காரணம் ஆகும்.
கடந்த 2017-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் முத்தலாக் முறை மீதான வழக்கில் அதை தடை செய்துள்ளது. இதன் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டமும் இயற்ற முயன்று வருகிறது. முத்தலாக் முறையை தடை செய்து இரண்டாவது முறையாக இயற்றப்பட்ட அவசரசட்டம் தற்போது நாடு முழுவதிலும் அமலில் உள்ளது.
இதன் மீதான சட்டம் இந்தமுறை 17-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT