Published : 19 Jun 2019 12:00 AM
Last Updated : 19 Jun 2019 12:00 AM
தமிழகத்தின் 38 எம்பிக்களும் நேற்று மக்களவையில் தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இவர்களில் பலரும் பாஜகவினரின் எதிர்ப்பை மீறி கடைசியாக தமிழ் மொழி மற்றும் தம் தலைவர்களை பாராட்டி கோஷமிட்டனர்.
மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி.க்களின் பதவி ஏற்பு நேற்று இரண்டாவது நாளாக நடந்து முடிந்தது. இதில், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினரும் மக்களவை எம்பிக்களாகப் பதவி ஏற்றனர். தமிழ் மொழியில் உறுதிமொழியை கூறிய இவர்கள் பதவி பிராமணங்களை இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் நடத்தி வைத்தார். தமிழகத்தின் முதல் உறுப்பினராகப் பதவி ஏற்ற திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பியான கே.ஜெயக்குமார், தமிழில் உறுதிமொழி கூறிய பின், ‘வாழ்க மகாத்மா காந்தி, வாழ்க அம்பேத்கர், வாழ்க பெரியார், வாழ்க பெருந்தலைவர் காமராஜர்’ என கடைசியில் முடித்தார்.
இதை தொடர்ந்து பதவி ஏற்ற அனைத்து எம்பிக்களும் தமிழிலேயே உறுதிமொழியை கூறினர். இதற்காக முன்கூட்டியே அனுமதி பெற்று உறுதிமொழியின் ஆங்கில மொழிபெயர்ப்பை தமிழில் படிக்கும் போது சபாநாயகரால் சரிபார்த்து கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பாஜக எம்பிக்கள் சிலர் தமிழக உறுப்பினர்கள் எழுப்பிய கோஷங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ‘பாரத் மாதா கீ ஜெய்’, ‘ஜெய் பாரத்’ எனக் கோஷமிட வலியுறுத்தினர். ஆனால், இவர்கள் கூறியதை அதிமுகவின் ஒரே ஒரு உறுப்பினரான ரவீந்திரநாத் குமார் தவிர மற்ற எவரும் கண்டுகொள்ளவில்லை. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான இவர், ‘வாழ்க புரட்சித் தலைவர், வாழ்க புரட்சித்தலைவி அம்மா’, ‘வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்’ எனக் கோஷமிட்டார். இவரை ஆளும்கட்சி முன்வரிசையில் இருந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலரும் கைகுலுக்கி வாழ்த்தினர். தொடர்ந்து பாஜக எம்பிக்கள் அளித்த எதிர்ப்புக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக உறுப்பினர் பழனிமாணிக்கம், ‘நீங்கள் நேற்று துவக்கியதைத்தான் இன்று அனைவரும் செய்கிறார்கள். உங்கள் எதிர்ப்பு தொடர்ந்தால் நாங்களும் பதிலளிக்க வேண்டி இருக்கும்’ என பேசினார்.
இதுபோன்ற சர்ச்சையால், உறுதிமொழியை தவிர வேறு எந்த கோஷங்களும் அவை பதிவில் இடம்பெறாது என சபாநாயகர் அறிவித்தார். இருப்பினும், எதிர்ப்புக்கு இடையே, தமிழகத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் கோஷமிடுவதை நிறுத்தவில்லை, தமிழ் மொழி மற்றும் தலைவர்கள் பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோர் வாழ்க எனும் கோஷத்துடன் முடித்தனர். கனிமொழி, ’வாழ்க தமிழ், வெல்க பெரியார்’ எனக் கோஷமிட்டார். திமுகவின் சி.என்.அண்ணாதுரை, எஸ்.ஆர்.பார்த்திபன், டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், ஆகியோர் ’தளபதி வாழ்க’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் வாழ்த்தி கோஷமிட்டனர். டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், வேலுச்சாமி, நவாஸ்கனி (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோர் கோஷமிடாமல் உறுதிமொழி மட்டும் கூறினர். திமுகவின் தர்மபுரி தொகுதி எம்பி டாக்டர்எஸ்.செந்தில்குமார் மட்டும், ‘திராவிடம் வெல்க’ எனும் கோஷமிட்டதுடன் பதவி ஏற்பின்போது கருப்புச்சட்டையும் அணிந்திருந்தார்.
காங்கிரஸின் எம்பிக்களான வசந்த்குமார், ‘ஜெய் ஜவான், ஜெய் கிஸான் (வாழ்க போர்வீரர், வாழ்க விவசாயி)’ என்றதுடன் ராஜீவ் காந்தி பெயரையும் குறிப்பிட்டு வாழ்த்தினார். இவரை போல் ராஜீவ் பெயரை டாக்டர்.ஏ.செல்லக்குமாரும் கூறி இருந்தார். அப்போது எதிர்க்கட்சிகளின் முன்வரிசையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் அமர்ந்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினரான தொல்.திருமாவளவன் பெரியார், அம்பேத்கர் பெயரைக் கூறி வெல்க ஜனநாயக சமத்துவம் என கோஷமிட்டார். இடதுசாரி உறுப்பினர்களில் கே.சுப்பராயன், ‘மதச்சார்பின்மை நீடூழி வாழ்க, இந்தியா நீடூழி வாழ்க’ என ஆங்கிலத்தில் இட்ட கோஷம் அனைவரையும் கவர்ந்தது. பி.ஆர்.
நடராஜன், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ எனவும், எம்.செல்வராஜ், ‘வாழ்க தொழிலாளர் ஒற்றுமை’ என்றும் கூறினர். சு.வெங்கடேசன், ‘மார்க்சியம் வாழ்க’ என்று தெரிவித்தனர்.
கார்த்தி சிதம்பரம் பதவி ஏற்பை காண அவரது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் பார்வையாளர்கள் சிறப்பு மாடத்தில் அமர்ந்திருந்தார். இவருடன் மாநிலங்களவை உறுப்பினர்களான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்பியான கிருஷ்ணசாமி ஆகியோரும் இருந்தனர். கிருஷ்ணசாமி தன் மகன் டாக்டர் விஷ்ணு பிரசாத் பதவி ஏற்பை கண்டு மகிழ்ந்தார். இவர்களை போல், மற்ற தமிழக எம்பிக்களின் குடும்பத்தினரும் பார்வையாளர்கள் மாடத்தில் பதவி ஏற்பை கண்டு மகிழ்ந்தனர். தொல்.திருமாவளவனின் பதவியேற்பை அவரது தாய் பெரியம்மாள் மாடத்தில் அமர்ந்து ரசித்தார்.
உறுதி மொழிக்கு பின் கோஷங்கள் எழுப்புவது இதுவே முதல் முறை. இதற்கு முன் தமிழில் உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது போல் அப்போது கோஷங்கள் போடப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT