Published : 05 Jun 2019 12:00 AM
Last Updated : 05 Jun 2019 12:00 AM

ஏழுமலையானை ஆண்டுக்கு ஒருமுறை தரிசிக்கலாம்; முக்கியப் பிரமுகர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக திருப்பதி வந்தார். அவருக்கு திருப்பதி மற்றும் திருமலையில் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், நேற்று காலை அவர் தனது குடும்பத்தார் 16 பேருடன் ஏழுமலையானை தரிசித்தார்.

அதன் பின்னர், அவரது மனைவி உஷா, மகள் தீபா உட்பட அவரது நெருங்கிய உறவினர்கள் முறைப்படி ஸ்ரீவாரி சேவா தன்னார்வ அமைப்பில் பதிவு செய்து, அன்னதான மையத்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்கள். இதில் வெங்கய்ய நாயுடுவும் பங்கேற்று, பக்தர்களோடு பக்தராக இலவச உணவு சாப்பிட்டார். முன்னதாக

அவர், கோயிலில் சுவாமியை தரிசனம் செய்தார். அவருக்கு முகப்பு கோபுர வாசலில் பூரண கும்ப மரியாதை அளித்த தேவஸ்தான அதிகாரிகள், அவரது குடும்பத்தினருக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். பின்னர், ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

இதனை தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த வெங்கய்ய நாயுடு, செய்தியாளர்களிடம் பேசும்போது, “பசியும், ஊழலும் இல்லாத நாடாக நமது சமுதாயம் உயர வேண்டும். காழ்ப்புணர்வு, பழி வாங்கல் போன்ற கெட்ட எண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை அனைவருக்கும் கடவுள் அருள வேண்டும்.

சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க, திருப்பதி ஏழுமலையானை பிரமுகர்கள், விஐபிக்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நேரில் வந்து தரிசனம் செய்ய தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் சாதாரண பக்தர்கள் நிம்மதியாக சுவாமியை தரிசிக்க இயலும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x