Last Updated : 21 Jun, 2019 04:32 PM

 

Published : 21 Jun 2019 04:32 PM
Last Updated : 21 Jun 2019 04:32 PM

டெல்லி வானொலி நிலைய தேசியச் செய்திகளின் தமிழ் சேவை மீண்டும் தொடங்க வேண்டும்: மாநிலங்களவையில் டி.ராஜா வலியுறுத்தல்

டெல்லி வானொலி நிலைய தேசியச் செய்திகளின் தமிழ் சேவை, தமிழகத்தின் மூன்று நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதை மீண்டும் தொடங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா இன்று மாநிலங்களவையில் வலியுறுத்தினார்.

இது குறித்து டி.ராஜா மாநிலங்களவையில் பேசியதாவது:

''மிகவும் பழமையான செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழி மீதான முக்கியப் பிரச்சினையை இங்கு எழுப்ப விரும்புகிறேன். தென்மாநிலங்கள் அனைத்திலும் தமிழ் மொழி பரவலாகப் பேசப்படுகிறது. இது அரசு மொழியாக இலங்கை, சிங்கப்பூர் நாடுகளில் பேசப்படுகிறது. கல்விக்கான மொழியாக மலேசியாவிலும், சிறுபான்மையினர் மொழியாக தென் ஆப்ரிக்கா மற்றும் மொரிஷியஸிலும் உள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் தமிழ் மொழி மூன்றாவது தேசிய மொழியாகவும் உள்ளது.

புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டாலும் அதில், மத்திய அரசு தமிழ் மொழியைக் குறைத்து கருதுகிறது. இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக தேசியச் செய்திகளில் தமிழுக்கான சேவை அகில இந்திய வானொலி நிலையம், டெல்லியில் நிறுத்தப்பட்டுள்ளது. இது பிராந்திய செய்திப் பிரிவான சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்துடன், அகில இந்திய வானொலி நிலையத்தின் தமிழ் செய்திக்கான பிரிவுகள் நான்கில் இருந்து மூன்றாகவும் குறைக்கப்பட்டு விட்டது.

இவ்வாறு செய்வது, தேசியச் செய்திகளில் ஒரு பிராந்திய செய்திப் பிரிவைப் புறக்கணிப்பதாகும். தேசியச் செய்திகளில் அனைத்து மொழிகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும். இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், நேபாளி, காஷ்மீரி, மற்றும் பஞ்சாப் மொழிகளின் செய்திச் சேவை இன்னும் இயங்க தமிழ் மட்டும் மூடப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டாலும் அதை நம் நாடான இந்தியா செய்வதில்லை. தமிழகத்திற்கு வெளியேயும் தமிழ் குறிப்பாக டெல்லியின் தமிழ் செய்திச் சேவை உடனடியாக மீண்டும் தொடங்கப்படுவது அவசியம்''.

இவ்வாறு டி.ராஜா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x