Published : 13 Sep 2014 09:38 AM
Last Updated : 13 Sep 2014 09:38 AM

புதிய தலைநகரை உருவாக்க ரூ.1 லட்சம் கோடி தேவை: 14-வது நிதி கமிஷனிடம் ஆந்திர முதல்வர் கோரிக்கை

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்க ரூ. 1,00,213 கோடி தேவைப்படும் என்று நிதி கமிஷனிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.

திருப்பதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில், மத்திய 14-வது நிதி கமிஷனின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ஒய்.வி. ரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கமிஷனின் உறுப்பினர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தி, மாநில நிதி அமைச்சர் யனமல ராமகிருஷ்ணுடு, அமைச்சர்கள் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி, உமா மகேஸ்வர ராவ், நாராயணா, காமினேநி ஸ்ரீநிவாஸ், கண்டா ஸ்ரீநிவாச ராவ் மற்றும் முதன்மை செயலாளர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணா ராவ் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

காலையில் தொடங்கிய இந்தக் கூட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநிலத்துக்கு தேவையான நிதி, மற்றும் தற்போதைய பற்றாக்குறை ஆகியவை குறித்து 2 அறிக்கைகளை வழங்கி அதுபற்றி விவரித்தார்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் முதல்வர் கூறியதாவது:

மாநிலப் பிரிவினையால் தற்போதைய ஆந்திர மாநிலத்துக்கு பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நடப்பு 2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மட்டும் ரூ. 15,691 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டில் ரூ.25,000 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பட்ஜெட்டில் ஏற்படும் பற்றாக்குறையை மத்திய அரசே ஏற்க வேண்டும் என நிதி கமிஷனிடம் தெரிவித்துள்ளோம்.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்த மொத்த மக்கள் தொகையில் 58 சதவீதம் பேர் பிரிவினைக்குப் பிறகு ஆந்திராவில் உள்ளனர். ஆனால் ஒருங்கிணைந்த ஆந்திராவின் வருவாயில் 47.6 சதவீதம் மட்டுமே புதிய ஆந்திராவுக்கு கிடைக்கிறது.

மேலும் ராயலசீமா, வடக்கு ஆந்திரா ஆகியவை மிகவும் பின் தங்கிய மாவட்டங்களாக உள்ளன. இந்த மாவட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவித்து போதிய நிதி உதவி வழங்க வேண்டும்.

இப்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுடன் சிறப்பு நிதியாக கூடுதலாக ரூ. 41,300 கோடி வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஆந்திராவை ஒப்பிடாமல் இந்த நிதியை வழங்க வேண்டும்.

மேலும் புதிய தலைநகரை உருவாக்க ரூ. 1 லட்சத்து 213 கோடி நிதி தேவைப்படுகிறது. மாநிலப் பிரிவினை சட்டத்தின்படி இந்த நிதியையும் மத்திய அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x