Published : 01 Jun 2019 12:51 PM
Last Updated : 01 Jun 2019 12:51 PM
ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கியவர்கள் மீது மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி கொலை வழக்கு போட சாத்தியமுள்ளது என கருத்து தெரிவித்திருக்கிறார் மேகாலயா ஆளுநர் தத்தகத்தா ராய்.
முன்னதாக, நேற்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி காரில் செல்லும் வழியில் குழுமியிருந்த சிலர் காரை மறித்து ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கினர். இதனால், ஆத்திரத்தில் அவர் காரிலிருந்து இறங்கி கோஷமிட்டவர்களை சரமாரியாக திட்டித்தீர்த்தார்.
அங்கே கூடியிருந்தவர்களைப் பார்த்து, "இவர்கள் அனைவரும் யாரென்று எனக்குத் தெரியும். இவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். பாஜகவினர். அவர்கள் கிரிமினல்கள் அதனாலேயே என்னை அவதூறு செய்கின்றனர். இவர்களுக்கு எல்லாம் நான் சவால் விடுகிறேன். நான் அடித்தால் தாங்க மாட்டார்கள், மிதுன் சக்கரபர்த்தி திரைப்பட்டத்தில் வரும் வசனம் நினைவிருக்கிறதா?
அதே வசனத்தை இப்போது என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் அதில் அவர் சவங்களைப் பற்றி பேசியிருப்பார். ஆனால், ஒன்று சொல்கிறேன். நான் இங்கு அடித்தால் நீதி வேறொரு இடத்தில் வழங்கப்படும்" என்று எச்சரித்துச் சென்றார்.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள மேகாலயா ஆளுநர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கிய நபர்கள் மீது பிணையில் வெளிவர இயலாத கொலை முயற்சி வழக்கு பாய அதிக வாய்ப்பிருக்கிறது. இது எனக்கும் நடந்திருக்கிறது. 2011-ல் நான் பேசிய மேடைப் பேச்சு ஒரு எம்.எல்.ஏ.வுக்கு பிடிக்காமல் போக என் மீது 307 சட்டப்பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவானது. ஓரிரவு நீதிமன்றக் காவலில் இருக்க நேர்ந்தது" எனப் பதிவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 22 தொகுதிகளில் பாஜக 18 இடங்களைக் கைப்பற்றியது. திரிணமூலுக்கு இது மிகப்பெரிய பின்னடைவு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT